முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய நால்வருக்கும் பிணை

முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் கைதான நால்வரும் பிணையில் விடுவிப்பு

by Bella Dalima 17-05-2024 | 6:47 PM

Colombo (News 1st) திருகோணமலை - சேனையூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் சர்வதேச சிவில் மற்றும் குடியியல் உரிமைகள் தொடர்பிலான இணக்கப்பாட்டு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரும் மூதூர் நீதவான் நீதிமன்றத்தினால் இன்று (17) பிணையில்  விடுவிக்கப்பட்டுள்ளனர். 

தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான 4 சரீரப் பிணைகளில் குறித்த சந்தேகநபர்கள் நால்வரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

சம்பூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை அனுஷ்டிப்பது தொடர்பில், சம்பூர் பொலிஸார் கடந்த 12 ஆம் திகதி பெற்றுக்கொண்ட தடையுத்தரவு மூதூர் நீதவான் நீதிமன்றத்தினால் நேற்று நீக்கப்பட்டது.

குறித்த தடையுத்தரவை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நால்வரையும் விடுவிக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரத்திற்கமைய, சந்தேகநபர்கள்பிணையில் விடுவிக்கப்பட்டனர்.