எல்ல - வெல்லாவய வீதி மீண்டும் திறப்பு

எல்ல - வெல்லாவய வீதி மீண்டும் திறப்பு

by Bella Dalima 17-05-2024 | 3:36 PM

Colombo (News 1st) மண்சரிவு அபாயத்தினால் மூடப்பட்டிருந்த எல்ல - வெல்லாவய வீதி, வாகனப் போக்குவரத்திற்காக இன்று (17) மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 

மண்சரிவு மற்றும் கற்பாறைகள் சரிந்து வீழும் அபாயத்தினால் நேற்று மாலை 06 மணி முதல் இன்று காலை 06 மணி வரை குறித்த வீதி மூடப்பட்டிருந்தது. 

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் அதிகாரிகள் மேற்கொண்ட பரிசோதனைகளுக்கமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. 

எனினும், நேற்றிரவு முதல் மழையுடனான வானிலையில் வீழ்ச்சி ஏற்பட்டமையைக் கருத்திற்கொண்டு எல்ல - வெல்லாவய வீதி மீண்டும் வாகனப் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும், விசேட நிலைமைகள் அவதானிக்கப்படுமாயின், குறித்த வீதியை உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் E.L.M. உதயகுமார தெரிவித்தார். 

இதற்கமைய, குறித்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் வீதித் தடைகளில் வழங்கப்படும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி போக்குவரத்தில் ஈடுபடுமாறு வாகன சாரதிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.