சீனா சென்றுள்ள ரஷ்ய அதிபர் புதின்

சீனா சென்றுள்ள ரஷ்ய அதிபர் புதின்: உக்ரைனுடனான போர் பற்றி கலந்துரையாடல்

by Bella Dalima 16-05-2024 | 5:14 PM

Colombo (News 1st) ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் (Vladimir Putin) சீனா சென்று அதிபர் ஷி ஜின்பிங்கை (Xi Jinping) சந்தித்துள்ளார். 

ரஷ்ய அதிபராக ஐந்தாவது முறையாக பதவியேற்ற பின்னர் புதின் இந்த உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார். 

சீன அதிபருடனான தனது இன்றைய சந்திப்பில், உக்ரைனுடனான போர் பற்றி கலந்துரையாடியதாக புதின் தெரிவித்துள்ளார். 

இஸ்ரேல்-காஸா போரை முடிவுக்குக் கொண்டு வருவது மிகவும் அவசரமான இலக்கு என இரு நாட்டுத் தலைவர்களும் தெரிவித்துள்ளனர். 

சீனாவிற்கான தனது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமானது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு 'எப்போதும் இல்லாத உயர்ந்த நிலையை' எட்டியதால் மேற்கொள்ளப்பட்டதாக ரஷ்ய அதிபர் குறிப்பிட்டுள்ளார். 

நிலவும் கடினமான சர்வதேச சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் தமது உறவு வலுவடைந்து வருவதாக அவர் சீன ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். 

ரஷ்யாவிற்கு ஒரு நல்ல நண்பராக இருக்க தயாராக இருப்பதாக ஷி ஜின்பிங் தெரிவித்தாலும் அவருக்கு அதில் சில தடங்கல்கள் இருக்கின்றன. ரஷ்யாவிற்கு ஆயுத உதவிகளை வழங்கினால் பெய்ஜிங் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க வாஷிங்டன் தயாராக உள்ளது.

ரஷ்யாவுடன் வணிக உறவுகளில் இருக்கும் பெய்ஜிங் மற்றும் ஹாங்காங்கைத் தளமாகக் கொண்ட சீன வங்கிகள்,  நிறுவனங்களுக்கு எதிராக புதிய பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா ஏற்கனவே அறிவித்துள்ளது. 

எவ்வாறாயினும், மந்த நிலையில் உள்ள சீன பொருளாதாரத்தை வலுப்படுத்தும் விடயத்திற்கு முன்னுரிமையளித்து செயற்படும் கட்டாயத்தில் அதிபர் ஜின்பிங் உள்ளார். 

எனினும், மேற்கு நாடுகளின் அதிகரித்து வரும் அழுத்தங்களுக்கு மத்தியில் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்த இருவரும் ஒப்புக்கொண்டுள்ளனர். 

இந்த சந்திப்பையடுத்து, இரு நாட்டுத் தலைவர்களும்  "புதிய சகாப்தத்தில் விரிவான மூலோபாய ஒத்துழைப்பின் கூட்டாண்மையை ஆழப்படுத்துதல்" குறித்து ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

அதில், தமது நாடுகளின் நலன்கள், முக்கிய விடயங்களுக்கு ஆதரவளித்து செயற்படுவது தொடர்பில் விபரித்துள்ளனர்.