பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

by Bella Dalima 20-04-2024 | 7:12 PM

Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்று நாளையுடன் 5 வருடங்கள் பூர்த்தியாகின்றன. 

இந்நிலையில்,  பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை நீதி பெற்றுக்கொடுக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் இன்று (20) பிற்பகல் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. 

கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, பொதுமக்களிடம் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கான அனுமதி குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு வழங்கப்படவில்லையென கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு மறைமாவட்ட பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்த கருத்து தொடர்பில் பொலிஸ் ஊடகப்பேச்சாளரிடம் இன்று கேள்வியெழுப்பப்பட்டது.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் நேற்று வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அருட்தந்தை சிறில் காமினி இதனை தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ, தமக்கு வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் தம்மால் முடிந்த அனைத்தையும் மேற்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் சட்டமா அதிபர் ஆரம்பம் முதலே தேவையான அறிவுறுத்தல்களை வழங்கி வருவதாகவும் அவர் கூறினார்.

பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கும் பட்சத்தில், அவை தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, தேவையான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ குறிப்பிட்டார். 

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இருந்து இன்று பிற்பகல் பேரணியொன்று ஆரம்பமானது.

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற விசேட ஆராதனைகளின் பின்னர் பேரணி ஆரம்பமானது.

கொச்சிக்கடை தேவாலயத்தில் ஆரம்மான பேரணி மோதர , வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க , நீர்கொழும்பு ஊடாக புனித செபஸ்டியன் தேவாலயம் வரை செல்லவுள்ளது.