ஒப்பந்தங்கள் மே மாதத்திற்குள் எட்டப்படக்கூடும்

இறையாண்மை பத்திர மறுசீரமைப்பு ஒப்பந்தங்கள் மே மாதத்திற்குள் எட்டப்படும் என கணிப்பு

by Staff Writer 18-04-2024 | 8:29 PM

Colombo (News 1st) இலங்கை மற்றும் இறையாண்மை பத்திர உரிமையாளர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. 

இருதரப்பினருக்கு இடையில் கொள்கையளவிலான இணக்கப்பாடு எட்டப்பட்டதன் பின்னர் உத்தியோகபூர்வ மதிப்பீட்டை முன்வைக்கவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது. 

இலங்கை தொடர்பில் செயற்படுத்தப்படும் சர்வதேச நாணய நிதிய வேலைத்திட்டத்துடன் இணங்கும் வகையில், இறையாண்மை பத்திர மறுசீரமைப்பு தொடர்பில் இருதரப்பினருக்கிடையிலும் இணக்கப்பாடு எட்டப்படுமென எதிர்பார்க்கப்படுவதாக, சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஒருவரை மேற்கோள் காட்டி Reuters செய்திச் சேவை தெரிவித்துள்ளது. 

12.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இறையாண்மைப் பத்திரங்களை மறுசீரமைப்பதற்கு இதுவரை இறுதி இணக்கப்பாடு எட்டப்படவில்லை என நிதியமைச்சு அண்மையில் வௌியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, இலங்கையின் 12.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இறையாண்மை பத்திரங்களை, மே மாத நடுப்பகுதியளவில் மறுசீரமைப்பதற்கான இயலுமை கிடைக்கும் என, இறையாண்மை பத்திர உரிமையாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தரப்பான Standard Chartered ஆய்வு நிறுவனத்தை மேற்கோள் காட்டி Bloomberg இணையத்தளம் செய்தி வௌியிட்டுள்ளது. 

கடன் வழங்குநர்கள் முன்வைத்துள்ள Micro Link Bond முறைமையே, இறையாண்மை பத்திர மறுசீரமைப்பை ஏற்படுத்துவதற்கான பிரதான தடையாகக் காணப்படுவதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

இந்த நடைமுறைக்கமைய, பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பொருளாதார முன்னேற்றங்களின் அடிப்படையில், இறையாண்மை பத்திர உரிமையாளர்களுக்கான நன்மைகள் தீர்மானிக்கப்படும். 

எவ்வாறாயினும், இணக்கப்பாடு தாமதமடைவதனூடாக குறித்த கலந்துரையாடல், இந்த ஆண்டில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள ஜனாதிபதித் தேர்தல்  வரை காலதாமதமடைவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.  

இதன் காரணமாக, இறையாண்மை பத்திர மறுசீரமைப்பு தொடர்பிலான  இணக்கப்பாட்டை விரைவுபடுத்துவதன் முக்கியத்துவத்தை  அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 


 

ஏனைய செய்திகள்