Colombo (News 1st) சித்திரை புத்தாண்டு 'குரோதி' வருடமானது நாளை (13) மலரவுள்ளது.
புத்தாண்டை வரவேற்க அனைவரும் ஆயத்தமாகி வருகின்றனர்.
இதனிடையே, புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கொழும்பில் இருந்து அடையாளம் காணப்பட்ட ஐந்து முக்கிய பகுதிகளுக்கு வழமையான சேவைகளுக்கு மேலதிகமாக 700 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
அதிவேக வீதிகளில் பயணிக்கும் பஸ்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இலங்கை போக்குவரத்து சபை விசேட பஸ் சேவையை முன்னெடுத்துள்ளது.
கொழும்பிலிருந்து பயணிக்கும் பஸ்களின் எண்ணிக்கையை 1400 ஆக அதிகரித்துள்ளதுடன், அதிவேக வீதியில் 90 பஸ்களை சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து கண்டி, குருநாகல், காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கு அதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், 077 105 60 10 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தேவையான தகவல்களை பெற்றுகொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தவிர, விசேட ரயில் சேவைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
எதிர்வரும் 15 ஆம் திகதி வரை பதுளையில் இருந்து கொழும்புக்கு சொகுசு ரயிலும், பதுளையிலிருந்து கொழும்பு வரை சொகுசு ரயிலும் சேவையில் ஈடுபடவுள்ளன.
யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும் பயணிகள், கொழும்பில் இருந்து ரயில் வசதிகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில், சிறு அசௌகரியங்களை எதிர்நோக்கினாலும், அனுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு தினசரி இரண்டு ரயில்கள் சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதனிடையே, புதுவருடத்தின் போது ஏற்படும் வீதி விபத்துகளை குறைப்பதிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
புத்தாண்டு காலத்தில் பட்டாசு கொளுத்துவதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பண்டிகைக் காலங்களில் ஏற்படும் விபத்துகளில் 36 வீதமானவை பட்டாசு கொளுத்துவதால் ஏற்படுவதாகவும், அதில் 17 வீதமானவர்களுக்கு பட்டாசு கொளுத்துவதால் கண் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.