Colombo (News 1st) அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோலாவில்-02 பகுதியில் தீயில் கருகி உயிரிழந்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
ஓலைகளால் வேயப்பட்ட வீட்டின் முன் அறையில் குறித்த நபர் நேற்று முன்தினம் (10) காலை தீயில் கருகி உயிரிழந்துள்ளார்.
நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் மீதான பிரேத பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில், குறித்த நபர் கழுத்து வெட்டப்பட்டமையால் ஏற்பட்ட அதிக இரத்தப் போக்கின் காரணமாக உயிரிழந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கமைய, இதுவொரு கொலை என தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளுக்காக உயிரிழந்தவரின் 33 வயதான மனைவியும் அவருடன் தொடர்புகளை பேணிய 63 வயதான மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.