.webp)
Colombo (News 1st) அமெரிக்கா, கனடா, மற்றும் மெக்சிகோ நாட்டு மக்கள் முழு சூரிய கிரகணத்தை நேற்று ( ஏப்ரல் 8) கண்டுகளித்துள்ளனர்.
வட அமெரிக்க கண்டம் முழுதும் அமைந்த கிரகண பாதை, மேற்கே மெக்சிகோவின் கடற்கரையிலிருந்து கிழக்கே நயாகரா நீர்வீழ்ச்சி வரை கடந்து சென்றது.
முதன்முதலில் மெக்சிகோவின் மசாட்லான் நகருக்கு அருகில், இலங்கை நேரப்படி இரவு சுமார் 11:50 மணிக்கு தென்பட்டது.
வட அமெரிக்க கண்டத்தை தென்மேற்கிலிருந்து வடகிழக்கு வரை கடந்த முழு கிரகணம், இறுதியாகத் தென்பட்டது கனடாவின் கிழக்குக் கடற்கரையான நியூஃபவுண்ட்லேண்டின் ஃபோகோ தீவில்.
கிரகணம் தென்பட்ட மூன்று நாடுகளிலும் பல மக்கள் பொதுவெளிகளில் கூடி, ஆரவாரத்துடன் அதனை கண்டுகளித்துள்ளனர்.
முதலில் நிலாவின் விளிம்பு சூரியனைத் தொடுவது போலத் தோன்றியது. தொடர்ந்து நிலா சூரியனை முழுவதுமாக மறைத்தது. கிரகணத்தின் உச்சத்தில், முழுவதும் இருள் சூழ்ந்தது. நிலாவின் விளிம்பைச் சுற்றியும் சூரியனின் ஒளிவட்டம் மட்டுமே தென்பட்டது.
கிரகணத்தின்போது வெப்பநிலை திடீரெனச் சரிந்தது. எங்கும் நிசப்தம் சூழ்ந்தது.
அமெரிக்காவில் பலரும் இந்த கிரகணத்தை தங்கள் வாழ்க்கையின் முக்கியமான நாளாக மாற்றிக்கொள்ள விரும்பினர். முழு கிரகணம் நிகழும்போது 300 ஜோடிகள் திருமணம் செய்துகொண்டனர்.
அர்கான்ஸாஸ் மாகாணத்தில் அமெரிக்கா முழுதும் இருந்து வந்திருந்த 300 ஜோடிகள் முழு கிரகணம் நிகழ்ந்த தருணத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
கிரகணத்தின் போது பட்டப்பகலில் நட்சத்திரங்கள் தென்பட்டன. மக்கள் அவற்றை ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
ஆனால் பல அமெரிக்க நகரங்களில் முழு சூரிய கிரகணம் தென்படவில்லை. இருந்தும் இந்த வானியல் நிகழ்வு ஆச்சரியமூட்டுவதாக அமைந்தது.
உதாரணமாக நியூயார்க் நகரத்தின் மன்ஹாட்டனில் உள்ள ஒரு உயரமான கட்டிடத்தின் மாடியில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். அவர்களுக்குப் பிறைபோன்ற பகுதி சூரிய கிரகணம் தென்பட்டது.
நயாகரா நீர்விழ்ச்சி இருக்கும் அமெரிக்க-கனடா எல்லையின் இருபுறமும் மக்கள் கிரகணத்தைக் காணக் குவிந்திருந்தனர். இப்பகுதியில் வானிலை மோசமாக இருந்தாலும், முழு கிரகணத்தின் வேளையில் மேகமூட்டம் விலகி, வானியல் நிகழ்வைக் காணமுடிந்தது.
கனடாவின் மோன்ரியால் நகரத்தில் உள்ள மெக்-கில் பல்கலைக்கழகத்தில் 20,000 பேர் கூடியிருந்தனர்.
முழு கிரகணம், கனடாவின் கிழக்குக் கடற்கரையான நியூஃபவுண்ட்லேண்டின் ஃபோகோ தீவில் இறுதியாகத் தென்பட்டது.
Source: BBC/Aljazeera