.webp)
Colombo (News 1st) அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் காமினி திசாநாயக்க தெரிவித்தார்.
வைத்திய அதிகாரிகளின் பரிந்துரைக்கு அமைய, அமைச்சர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
நேற்று (02) குற்றவியல் விசாரணை திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று முற்பகல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இன்றைய வழக்கு விசாரணை ஆரம்பத்தில் சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரசாங்கத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி ஹிரிஹாகம, சர்ச்சைக்குரிய Human Immunoglobulin மருந்தை மருத்துவ விநியோகப் பிரிவுக்கு வழங்குவதற்கான நடவடிக்கையை முன்னெடுக்க சதித் திட்டம் தீட்டியமை, உடந்தையாக செயற்பட்டமை ஆகிய விடங்களின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக கூறினார்.
அமைச்சர் ஒருவரிடம் அமைச்சொன்று கையளிக்கப்பட்டதன் பின்னர் அதன் பொறுப்பு மற்றும் பொறுப்புகூறலின் தன்மை தௌிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல், மக்களின் இறையாண்மையை பிரதிபலிக்கும் அமைச்சின் பிரதிநிதியிடம் அதற்கான விடயதானங்கள் மற்றும் பொறுப்புகளை ஜனாதிபதி ஒப்படைப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
இதற்கமைய, நோயற்ற பிரஜைகளை உருவாக்குவது, பாதுகாப்பான மருந்து வகைகளை வழங்குவது போன்ற பொறுப்பு அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.