மறைந்தார் கெப்டன் விஜயகாந்த்

கெப்டன் விஜயகாந்த் தனது 71ஆவது வயதில் இன்று காலமானார்

by Rajalingam Thrisanno 28-12-2023 | 1:41 PM

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவரும் தென்னிந்திய நடிகருமான கெப்டன் விஜயகாந்த் தனது 71 ஆவது வயதில் இன்று(28) காலமானார்.

நோய்வாய்ப்பட்டிருந்த அவர் இன்று காலையில் தனியார் மருத்துவமனையில் காலமானதாக விஜயகாந்தின் மைத்துனர் தகவல் வௌியிட்டுள்ளார்.

''நுரையீரல் அழற்சியினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந்துக்கு மருத்துவப் பணியாளர்களின் கடின முயற்சி இருந்தபோதிலும் காலமானார்” என மருத்துவமனை அறிக்கை வௌியிட்டுள்ளது.

கடந்த சில வருடங்களாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் விஜயகாந்துக்கு அண்மையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

கடந்த மாதம் 18 ஆம் திகதி மணப்பாக்கம் மியாட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டதையடுத்து அவர் வீடு திரும்பியிருந்தார்.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மீண்டும் சுகவீனமடைந்த விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தினர் அறிக்கை வௌியிட்டிருந்தனர்.

எவ்வாறாயினும், சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில் கெப்டன் விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் இன்று(28) காலை காலமானார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர்களில் நடிகர் விஜயகாந்துக்கு தனிச்சிறப்புள்ளது. 

பொது வாழ்விலும் கலைத்துறையிலும் அரசியல் களத்திலும் அளப்பரிய பங்களிப்பை அளித்த பெருமைக்குரிய நடிகர் விஜயகாந்தின் மறைவு தமிழ்நாட்டை மாத்திரமன்றி தமிழ் பேசும் மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.