.webp)
Colombo (News 1st) கொவிட் பெருந்தொற்று காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பொலிஸ் பொதுமக்கள் நிவாரண தினத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தீர்மானித்துள்ளார்.
அதற்கிணங்க, எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் பொது விடுமுறை தினங்கள் தவிர்ந்த அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் காலை 9 மணி முதல் பொதுமக்கள் நிவாரண தினம் இடம்பெறும் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
தனிப்பட்ட விடயங்கள் தொடர்பாக பொலிஸ் நிலையங்கள் மற்றும் விசாரணை பிரிவுகளில் முன்வைக்கப்படும் முறைப்பாடுகள், தீர்வு வழங்கப்படாத அல்லது தேவையற்ற தாமதங்கள் தொடர்பான நியாயமான விடயங்கள் குறித்து பொலிஸ் மா அதிபரிடம் முறையிட முடியும்.
சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளை இணைத்து நடத்தப்படும் இந்த மக்கள் நிவாரண தினத்தின் மூலம், பொதுமக்களுக்கு
இலங்கை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் தாமதமின்றி நியாயமாக சென்றடைய வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு எனவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபர் பிரதி வெள்ளிக்கிழமைகளில் பொதுமக்கள் நிவாரண தினத்தில் வருகை தருவதற்கு எதிர்பார்ப்பதுடன் பொதுமக்களின் முறைப்பாடுகளுக்கு நேரடி பதில்கள் வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.