.webp)
Colombo (News 1st) கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஓய்வுநிலை தமிழ் பேராசிரியர் செ.யோகராசா நேற்று (07) காலமானார்.
யாழ்ப்பாணம் - வடமராட்சி, கரணவாய் கிராமத்தை சேர்ந்த பேராசிரியர் செ.யோகராசா சுகவீனம் காரணமாக தனது 74 ஆவது வயதில் கொழும்பில் நேற்று காலமானார்.
அன்னார் 1991 ஆம் ஆண்டு கிழக்கு பல்கலைக்கழகத்தில், மொழித்துறை விரிவுரையாளராக இணைந்து, 2009 ஆம் ஆண்டு பேராசிரியராக நியமனம் பெற்று கடமையாற்றினார்.
ஈழத்து இலக்கிய பரப்பில் 1970 முதல் 1972 வரை ''கருணை யோகன்'' என்ற புனைப்பெயரில் அன்னார் கவிதைக் கதைகளை எழுதியுள்ளார்.
பின்னர் ஆய்வுத்துறையைத் தேர்ந்தெடுத்து, தன் சொந்தப் பெயரில் நவீன தமிழ் இலக்கியம், தமிழியல் ஆய்வு, ஈழத்து இலக்கியம், சிறுவர் இலக்கியம், பெண்கள் இலக்கியம், நாட்டாரியல், கல்வி உள்ளிட்ட துறைகளில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.
சிங்கப்பூர், மலேஷியா, லண்டன் ,சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், தமிழ்நாடு ஆகிய நாடுகளில் இடம்பெற்ற மாநாடுகளில் அன்னார் பல ஆய்வுகளை சமர்ப்பித்துள்ளார்.
ஈழத்து இலக்கியமும் இதழியலும், ஈழத்து தமிழ் நாவல், பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை, ஈழத்து தமிழியல் சார் தமிழ் ஆய்விதழ்கள் உள்ளிட்ட பல நூல்களை அன்னார் எழுத்தியுள்ளார்.
கிழக்கிலங்கை தமிழ் இலக்கிய வளர்ச்சியில் ஆய்வுகளை மேற்கொண்டு பங்காற்றிய காலஞ்சென்ற பேராசிரியர் செ.யோகராசா, சு.வித்தியானந்தன் விருது, இலக்கியப் பேரவை விருது, அரச சாஹித்ய விருது, வட மாகாண சபை விருது, கலை வாருதி விருது, தேனக கலைச்சுடர் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.
மட்டக்களப்பு - அரசடியிலுள்ள அன்னாரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள பூதவுடலுக்கு பலரும் தொடர்ச்சியாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இறுதிக்கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (10) அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் மட்டக்களப்பு கல்வியங்காட்டு பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
அஞ்சல் அதிபராக,பாடசாலை ஆசிரியராக, கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளராக, தமிழ்த்துறை தலைவராக, பேராசிரியராக கடமையாற்றி ஓய்வுபெற்ற அன்னாரின் மறைவு தமிழ்கூறும் நல்லுலகில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.