3ஆவது மின்பிறப்பாக்கி இணைக்கப்படாது - மின்சார சபை

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் 3ஆவது மின்பிறப்பாக்கி தேசிய கட்டமைப்புடன் இணைக்கப்பட மாட்டாது - மின்சார சபை

by Staff Writer 07-12-2023 | 6:09 AM

Colombo (News 1st) நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மூன்றாவது மின்பிறப்பாக்கியின் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள போதிலும், அது உடனடியாக தேசிய கட்டமைப்புடன் இணைக்கப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நீர் மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுவதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர், பொறியியலாளர் நொயெல் பிரியந்த தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மூன்றாவது மின்பிறப்பாக்கி செயற்படுத்துவதற்கு தயார் நிலையிலுள்ளதாக அவர் கூறினார்.

இலங்கை மின்சார சபையின் தரவுகளின் படி, நீர் மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு 97.7 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.

கடந்த 05 ஆம் திகதி நாளாந்த நீர் மின் உற்பத்தி 63 வீதமாகவும் அனல் மின் நிலையங்கள் ஊடாக 15.70 வீதமாகவும் மின்னுற்பத்தி மேற்கொள்ளப்பட்டது.

இதேவேளை, நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் இரண்டாவது மின்பிறப்பாக்கி செயலிழந்துள்ளது.