சுயாதீன கணக்காய்வை மேற்கொள்ளுமாறு PUCSL அறிவிப்பு

சுயாதீன கணக்காய்வை மேற்கொள்ளுமாறு மின்சார சபைக்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு

by Staff Writer 06-12-2023 | 11:55 AM

Colombo (News 1st) இலங்கை மின்சார சபையின் இலாபம் மற்றும் மின்சார உற்பத்தி தொடர்பில் சுயாதீன கணக்காய்வொன்றை மேற்கொள்ளுமாறு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

மின்சார சபையின் செலவுகள் தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் முன்வைக்கப்பட்ட முரண்பாடான தரவுகளைக் கருத்திற்கொண்டு இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இம்மாத இறுதிக்குள் எந்த தரப்பினரால் குறித்த கணக்காய்வு மேற்கொள்ளப்படவுள்ளது என்பது தொடர்பான அனைத்து தகவல்களையும் வழங்குமாறு மின்சார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, தற்போதைய நிலைமைக்கு மத்தியில் மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பான முன்மொழிவுகளை இந்த மாதத்திற்குள் முன்வைக்குமாறு மின்சார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த முன்மொழிவுகள் பரிசீலிக்கப்பட்டதன் பின்னர் எதிர்வரும் ஜனவரி மாதம் மின்சார கட்டணத்தை திருத்துவதற்கான பரிந்துரைகள் முன்வைக்கப்படும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.