.webp)
Colombo (News 1st) பேர வாவி அபிவிருத்தி திட்டத்தின் தரம் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து தயாரிக்கப்பட்ட அறிக்கை இம்மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதியிடம் கையளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கொழும்பு நகரை அழகுபடுத்தும் திட்டம் மற்றும் அதன் தற்போதைய முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை உடனடியாக ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவன பிரதானிகளுக்கு சாகல ரத்நாயக்க அறிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே சாகல ரத்நாயக்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
பேர வாவியை அபிவிருத்தி செய்தல், பேர வாவிக்கு திருப்பி விடப்படும் கழிவுநீர் குழாய்களைத் தடுத்தல், வாவியில் உள்ள பாக்டீரியா மற்றும் பாசிகளின் அளவை குறைத்தல் உள்ளிட்ட திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் இங்கு ஆராயப்பட்டுள்ளது.
3 இடங்களில் அமைந்துள்ள மத்திய பஸ் நிலையம், புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள பஸ் நிலையம் அமைந்துள்ள காணியை தனியார் துறையினருடன் இணைந்து வர்த்தக செயற்பாடுகளுக்காக அபிவிருத்தி செய்தல், கொழும்பு நகரிலுள்ள பாதுகாப்பற்ற மரங்களை அகற்றி, பொருத்தமான மரங்களை நடுவது குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன், எதிர்வரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலத்தில் கொழும்பில் ஏற்படும் நெரிசலைக் குறைப்பதற்கும், முகாமைத்துவம் செய்வதற்கும் இலங்கை பொலிஸ், கொழும்பு மாநகர சபை மற்றும் வர்த்தக சங்கங்கள் இணைந்து வேலைத்திட்டம் ஒன்றை தயாரிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.