பாராளுமன்ற வீதியில் ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பினர் எதிர்ப்பு நடவடிக்கை

by Bella Dalima 05-12-2023 | 8:06 PM

Colombo (News 1st) ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பினர்  பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்கும் வீதியில் இன்று எதிர்ப்பில் ஈடுபட்டனர். 

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் ஆசிரியர் அதிபர்களின் சம்பள முரண்பாடு உள்ளிட்ட கல்வித்துறையின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்படாமையைக் கண்டித்து பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகே இந்த எதிர்ப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் பிரதம செயலாளர் மஹிந்த ஜயசிங்க ஆகியோருக்கு எதிராக குறித்த எதிர்ப்பு நடவடிக்கை தொடர்பில் நீதிமன்ற உத்தரவொன்றும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அமைதியான முறையில் எதிர்ப்பில் ஈடுபடுவதற்கும் கருத்துகளை வௌியிடுவதற்கான சுதந்திரத்திற்கும் குறித்த உத்தரவினால் இடையூறு ஏற்படாது எனவும் கொழும்பு மேலதிக நீதவான் தமது உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.

எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் பேரணியாக பாராளுமன்றம் நோக்கிச் செல்வதற்கு முயற்சித்ததுடன், பொலிஸாரும் கலகத்தடுப்புப் பிரிவினரும் அவர்களை தடுத்தனர்.

பின்னர் அவர்கள் பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் எதிர்ப்பில் ஈடுபட்டு கலைந்து சென்றனர்.