.webp)
Colombo (News 1st) களனி பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு பிரிவு அதிகாரியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் 4 மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக களனி பல்கலைக்கழகத்தின் உப வேந்தர், சிரேஷ்ட பேராசிரியர் நிலந்தி டி சில்வா தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு பிரிவு அதிகாரி தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்கள் குறித்து பல்கலைக்கழக மட்டத்தில் உள்ளக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பேராசிரியர் நிலந்தி டி சில்வா கூறினார்.
அத்துடன், சம்பவத்தை எதிர்கொண்ட பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கு அமைய, விசேட பொலிஸ் விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம், தொழில்நுட்ப பீடம், கணினி பீடம் ஆகியன தவிர்ந்த ஏனைய பீடங்கள் நேற்று(04) பிற்பகல் முதல் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
அதற்கமைய, குறித்த பீடங்களைச் சேர்ந்த அனைத்து மாணவர்களும் இன்று(05) காலை 8 மணிக்கு முன்னர் விடுதிகளிலிருந்து வெளியேற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
களனி பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு பிரிவில் கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு அதிகாரியொருவரைத் தாக்கியமை மற்றும் மேலும் இரு பாதுகாப்பு அதிகாரிகளை கடத்திச்சென்று தடுத்து வைத்தமை உள்ளிட்ட சம்பவங்கள் குறித்து மேற்கொள்ளப்படும் விசாரணைகள் காரணமாக இவ்வாறு பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் குழுவினர் நேற்று(04) நாள் முழுவதும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
தமது பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கோரி அவர்கள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்திருந்தனர்.