.webp)
Colombo (News 1st) சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் இலங்கையில் இருந்து பலவந்தமாக நாடு கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள், மீண்டும் நாடு திரும்ப வேண்டும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில் இந்திய உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்று, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் ஊடக அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளார்.
இலங்கையில் இருந்து தாயகம் திரும்பியவர்களை இந்திய - இலங்கை ஒப்பந்தம் அடிப்படையில் இந்திய பிரஜைகளாக அங்கீகரிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இதனை வரவேற்றுள்ள அமைச்சர் ஜீவன் தொண்டான், வரலாற்று தவறை சீர்செய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்துவருவதாக தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மலையக மக்களுக்கு நீதி மற்றும் நியாயத்தை நிலைநாட்டுவதற்கான நல்லிணக்க பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளதுடன், 10 பேர்ச்சஸ் காணி உரிமையும் வழங்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் இந்த நடவடிக்கைகள் மாத்திரம் போதுமானதல்ல என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பலவந்தமாக நாடு கடத்தப்பட்டுள்ள மக்கள் இலங்கை திரும்ப வேண்டும் என்பதே தனது கோரிக்கையாகும் என கூறியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் இணைந்து பணியாற்ற தாம் தயாராக இருப்பதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் மேலும் தெரிவித்துள்ளார்.