COP 28 மாநாட்டில் கலந்துகொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரச தலைவர்கள் சிலருடன் கலந்துரையாடல்

by Bella Dalima 02-12-2023 | 7:21 PM

Colombo (News 1st) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரச தலைவர்கள் சிலரை இன்று (02) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 

ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாயில் நடைபெறும் COP 28 எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றுள்ள நிலையிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த கலந்துரையாடல்களில் பங்கேற்றுள்ளார். 

இதற்கமைய, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மெக்ரோனை இன்று சந்தித்துள்ளார். 

இதன்போது, இரு அரச தலைவர்களும் இருதரப்பு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.  

நாட்டின் பொருளாதாரத்தை பசுமை பொருளாதாரத்தை நோக்கி கொண்டு செல்லுதல் மற்றும் இந்து சமுத்திரத்தின்  RIM கூட்டமைப்புடனான பிரான்ஸின் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் ஆகிய விடயங்கள் தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. 

அத்துடன், இலங்கையில் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள சர்வதேச காலநிலை மாற்ற பல்கலைக்கழகத்திற்கு பிரான்ஸின் ஒத்துழைப்பை வழங்குமாறு, ஜனாதிபதி பிரான்ஸ் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதனிடையே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்துள்ளார். 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக X தளத்தில் இந்திய பிரதமர் குறிப்பிட்டுள்ளார். 

இந்த நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரேசில் ஜனாதிபதி Lula da Silva-வையும் இன்று சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். 

இதனிடையே, காலநிலை மாற்றம் குறித்த பிரச்சினைகளுக்கு நீதியானதும் நியாயமானதுமான உணர்வுகளுடன் தீர்வு காண வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க COP28 மாநாட்டில் “காலநிலை நீதி மன்றத்தை” இன்று (02) முன்மொழிந்தார்.

ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் வேலைத் திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் இங்கர் அண்டர்சன் (Inger Andersen) மற்றும் உகாண்டா சுகாதார அமைச்சர்  Dr. Aceng Jane Ruth ஆகியோரின் ஆதரவுடன் ஜனாதிபதி குறித்த யோசனையை முன்மொழிந்தார்.