.webp)
Colombo (News 1st) எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு மன்னார் முதல் காங்கேசன்துறை வரையிலும், திருகோணமலை முதல் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களிலும் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டாமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
காலி முதல் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களிலும் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், தாழமுக்கமாக மாற்றமடைந்து வருவதனால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை மறுதினம் (03) முதல் குறித்த தாழமுக்கம் சூறாவளியாக மாற்றமடையுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தினால், நாட்டின் பல பகுதிகளிலும் கடுமையான மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதற்கமைய, வடக்கு, வட மத்திய மாகாணங்களிலும், திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது.