இஸ்ரேல் - ஹமாஸ் இடையில் மீண்டும் போர் தொடங்கியது

இஸ்ரேல் - ஹமாஸ் இடையில் மீண்டும் போர் தொடங்கியது; காஸாவில் 14 பேர் பலி

by Bella Dalima 01-12-2023 | 5:07 PM

இஸ்ரேல் - ஹமாஸ் இடையில் ஒரு வார காலமாக அமுலில் இருந்த போர் நிறுத்தம் முடிவிற்கு வந்துள்ளது. 

உடனடியாக போரை ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே காஸாவில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். 

7 வாரங்களாக தொடர்ந்த போர் நவம்பர் 24 ஆம் திகதி முதல் நிறுத்தப்பட்டிருந்தது. 

கத்தார், எகிப்து மற்றும் அமெரிக்கா ஆகிய பிராந்திய நாடுகளின் தலையீட்டில் போர் நிறுத்த ஒப்பந்தம் இணக்கப்பாட்டிற்கு வந்தது. 

ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலை அடுத்து, இரு தரப்பிற்கும் இடையில் மோதல் உக்கிரமடைந்தது. 

இதில், இஸ்ரேல் தரப்பில் 1,200 பேரும் காஸாவில் சுமார் 15,000 பேரும் கொல்லப்பட்டனர். 

காஸாவில் ஹமாஸ் படையினரால் பிடித்து வைக்கப்பட்டிருந்த 400-க்கும் மேற்பட்ட பணயக்கைதிகளை விடுவிக்கும் முயற்சியாக போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் இணங்கியது. 

இதன்படி, போர் நிறுத்த காலத்தில் இரு தரப்பில் இருந்தும் பணயக்கைதிகள் சிலர் விடுவிக்கப்பட்டிருந்தனர். 

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான இந்த போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், இன்று போர் மீண்டும் தொடங்கியது. 

காஸாவில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணையை இடைமறித்ததாக இஸ்ரேல் இராணுவம் கூறிய சிறிது நேரத்திலேயே போர் மீண்டும் தொடங்கியது. 

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 

காசாவின் சுகாதாரத் துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் அஷ்ரப் அல் கித்ரா இதனைத் தெரிவித்துள்ளார். 

இந்த தாக்குதலில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்நிலையில், போர் மீண்டும் தொடங்கியதற்கு கத்தார் வருத்தம் தெரிவித்துள்ளதுடன், போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை இரு தரப்பிலும் தொடர்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ளது. 

ஏனைய செய்திகள்