VAT விலக்களிப்பை பரிசீலிக்குமாறு கோரிக்கை

சில உபகரணங்கள் மற்றும் பொருட்களுக்கு VAT விலக்களிப்பை பரிசீலிக்குமாறு கோரிக்கை

by Staff Writer 30-11-2023 | 5:38 PM

Colombo (News 1st) மருத்துவ உபகரணங்கள், அம்பியூலன்ஸ், குழந்தைகளுக்கான உயர் புரத உணவுகள் மற்றும் விவசாயப் பொருட்களுக்கான VAT விலக்களிப்பை மீண்டும் பரிசீலிக்குமாறு அரசாங்க நிதி பற்றிய குழு, நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட 119 வாகனங்களை சுங்கத்திலிருந்து விடுவிப்பது தொடர்பிலான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் நிதி அமைச்சுக்கு அரசாங்க நிதி பற்றிய குழு அறிவுறுத்தியுள்ளது.

ஒரு சில பொருட்களுக்கான பெறுமதி சேர் வரி விலக்களிப்பை நீக்குவதை நோக்கமாகக் கொண்ட - இலகுவாக்கப்பட்ட பெறுமதி சேர் வரியை (SVAT - Simplified Value Added Tax) நீக்குவது தொடர்பான ஏற்பாடுகள் உள்ளடங்கிய பெறுமதி சேர் வரி திருத்த சட்டமூலம் தொடர்பில், அரசாங்க நிதி பற்றிய குழு கவனம் செலுத்தியுள்ளது.

முன்னர் விலக்களிப்பு செய்யப்பட்ட பட்டியலிடப்பட்ட விவசாய உபகரணங்கள் மற்றும் இரசாயன உரங்கள் உள்ளிட்ட பிற உபகரணங்கள் இந்த சட்டமூலத்தின் ஊடாக VAT வரிக்குள் உள்வாங்கப்படுவதாக நிதியமைச்சை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

விவசாய விதைகள், விவசாய தாவரங்கள், இறால் மற்றும் கோழி தீவனங்கள் தவிர்ந்த கால்நடை தீவனங்கள் என்பனவற்றுக்கு VAT வரியில் இருந்து விலக்களிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதற்கமைய, வீட்டு விவசாயம் மற்றும் உணவுத் தொழிலை பாதிக்கும் விவசாய உபகரணங்கள் மீது VAT வரி அறிமுகப்படுத்தப்பட்டமையின் பின்னணியில் உள்ள நியாயம் குறித்தும் இங்கு கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற அரசாங்க நிதி பற்றிய குழுவில் இந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

கோதுமை, கோதுமை மா அல்லது பால் மா, மருந்து பொருட்கள் மற்றும் மருந்துகளுக்கு விலக்களிக்கப்படும் என நிதி அமைச்சு இதன்போது அறிவித்தது. 

சிறுவர் போஷாக்கின்மை காணப்படும் இலங்கையில், பயிரிடப்படும் தானியங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களை, அதி உயர் புரதம் மற்றும் அதிக சக்தி கொண்ட விவசாய உணவுகளாக அடையாளப்படுத்தி VAT வரியில் உள்ளடக்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

பெறுமதி சேர் வரி சட்டமூலத்தை பரிசீலித்த பின்னர், அரசாங்க நிதி பற்றிய குழுவினால் முன்வைக்கப்பட்ட திருத்தம் நிதி அமைச்சினால் உள்வாங்கப்படும் எனும் இணக்கப்பாட்டின் அடிப்படையில் அதற்கு அனுமதி வழங்கப்பட்டது. 

எனினும், வைத்திய உபகரணங்கள், அம்பியூலன்ஸ், உரங்கள் மற்றும் அதி உயர் புரத விவசாய உணவுகள் மற்றும் விவசாயப் பொருட்களாக வகைப்படுத்தப்பட்டுள்ள தானியங்களினால் பெற்றுக்கொள்ளப்படும் உணவுகளுக்கு VAT விலக்களிப்பு செய்வது தொடர்பில் மீள் பரிசீலனை செய்யுமாறு அதிகாரிகளிடம் குழு கேட்டுக்கொண்டுள்ளது.