மறுசீரமைப்பு தொடர்பில் கொள்கை அளவில் இணக்கப்பாடு

இலங்கை மற்றும் கடன் வழங்குநர்கள் இடையில் மறுசீரமைப்பு தொடர்பில் கொள்கை அளவில் இணக்கப்பாடு

by Bella Dalima 29-11-2023 | 5:27 PM

Colombo (News 1st) கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கொள்கை அளவிலான இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கைக்கான கடன் வழங்குநர்களின் உத்தியோகபூர்வ சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தியா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் அங்கத்துவம் வகிக்கும் இந்த சங்கத்தில் Paris Club மற்றும் ஹங்கேரி ஆகிய இருதரப்பு கடன் வழங்குநர்களும் உள்ளடங்குகின்றனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் விஸ்தரிக்கப்பட்ட கடன் வசதியின் தீர்மானங்களை மேற்கொள்வோருக்கு ஏற்றவாறு கடன் மறுசீரமைப்பிற்கான கொள்கை உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக இலங்கைக்கான கடன் வழங்குநர்களின் உத்தியோகபூர்வ சங்கம் சார்பில்  Paris Club இன்று வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள கடன் வசதியின் முதலாவது மீளாய்வை, சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையிடம் முன்வைப்பதற்கு இந்த உடன்பாட்டின் ஊடாக சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனூடாக சர்வதேச நாணய நிதியத்தின் விஸ்தரிக்கப்பட்ட கடன் வசதியுடன் தொடர்புடைய இரண்டாம் தவணையை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்குமெனவும்  Paris Club வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எதிர்வரும் சில வாரங்களுக்குள் இலங்கை அதிகாரிகளுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை உத்தியோகபூர்வமாக வௌியிடுவதற்கு கடன் வழங்குநர்களின் உத்தியோகபூர்வ சங்கம் எதிர்பார்த்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான பாரிய இருதரப்பு கடன் வழங்குநரான சீனா, உத்தியோகபூர்வமான முறையில் இந்த சங்கத்தில் பிரதிநிதித்துவம் வகிக்கவில்லை.

எனினும், சீன EXIM வங்கி வழங்கிய 4.2 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி குறித்து கடன் மறுசீரமைப்புடன் தொடர்புபட்ட இலங்கையுடன் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதாக சீனா ஏற்கனவே அறிவித்துள்ளது.

இந்தியா, ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட இலங்கைக்கான கடன் வழங்குநர்களின் உத்தியோகபூர்வ சங்கம், இந்த இணக்கப்பாடு தொடர்பில் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக கேள்வியெழுப்பியிருந்தது.

இதனிடையே, இலங்கை அதிகாரிகள் தனியார் கடன் வழங்குநர்களுடன் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொடர்பில் தொடர்ந்தும் செயற்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக  Paris Club வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்காக கடன் வழங்குநர்களின் உத்தியோகபூர்வ குழு முன்வைத்துள்ள நிபந்தனைகளுக்கு அமைவாக அல்லது அவற்றுக்கு இணையான வகையில் கூடிய விரைவில் இணக்கப்பாட்டிற்கு வருமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனூடாக இலங்கையின் கடன் மறுசீரமைப்பானது சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்திற்கு அமைவாக இடம்பெறுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுமென  Paris Club சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையை மீண்டும் நிலையான பாதையில் கொண்டு வருவதற்கு மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களை கடன் வழங்குநர்களின் உத்தியோகபூர்வ சங்கம் பாராட்டியுள்ளதாக  Paris Club வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.