தரமற்ற மருந்து இறக்குமதி தொடர்பில் விசாரணை ஆரம்பம்

தரமற்ற மருந்து இறக்குமதி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

by Staff Writer 28-11-2023 | 11:56 AM

Colombo (News 1st) தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆராய்வதற்காக 3 குற்றப்புலனாய்வுப் பிரிவு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

குறித்த விசாரணைகளின் போது அமைச்சின் முன்னாள் செயலாளர் உள்ளிட்ட சுமார் 30 அதிகாரிகளின் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான விலைமனு கோரல், மதிப்பீட்டு செயன்முறை நீண்ட காலமாக ஆய்வு செய்யப்பட்டு வருவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இரண்டாம் கட்டமாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெ​ஹெலிய ரம்புக்வெல்லவிடமும் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தவிடம் மீண்டும் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது.

போலியான இம்யூனோகுளோபியுலின் தயாரித்த நிறுவனத்தின் பல அதிகாரிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனிடையே இந்த சம்பவம் தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், பல விசேட வைத்தியர்களுடனான கலந்துரையாடல் இன்று(28) இடம்பெறவுள்ளது

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரின் பங்கேற்புடன் இந்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்படவுள்ளது