.webp)
Colombo (News 1st) இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சவுதி அரேபிய பொருளாதாரம் மற்றும் திட்டமிடல் அமைச்சர் பைசல் F.அலிப்ரஹிம் (Fisal F.Alibrahim) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேற்று(27) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கை மற்றும் சவுதி அரேபியா இடையில் நிலவும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இருநாடுகளுக்கும் இடையிலான ஆடை மற்றும் சுற்றுலாத்துறைகளை மேம்படுத்த எதிர்பார்ப்பதாக சவுதி அரேபிய பொருளாதாரம் மற்றும் திட்டமிடல் அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபிய அரசாங்கம் பிராந்தியத்தில் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துவதாக பைசல் F.அலிப்ரஹிம் சுட்டிக்காட்டியதுடன், அதில் இலங்கைக்கு முக்கிய இடம் காணப்படுவதாகவும் கூறியுள்ளார்.
மேற்கு ஆசியா உள்ளிட்ட ஆசிய பிராந்தியத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாக இதன்போது குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிராந்திய விவகாரங்கள் தொடர்பிலும் அமைச்சருடன் கலந்துரையாடினார்.
மேலும், இலங்கையின் சுற்றுலா மற்றும் விவசாயத் துறைகளை நவீனமயமாக்கும் வேலைத்திட்டம் குறித்து விளக்கமளித்த ஜனாதிபதி, அந்த துறைகளில் காணப்படும் முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பிலும் சவுதி அரேபிய பொருளாதாரம் மற்றும் திட்டமிடல் அமைச்சரை தௌிவூட்டினார்.