.webp)
Colombo (News 1st) ஒரு காலத்தில் சுழற்பந்து வீச்சில் கிரிக்கெட் உலகையே வியக்கவைத்த ஜாம்பவான்களை கொண்ட இலங்கை இன்று அதனை இழந்து தவிப்பது கவலைக்குரியது.
மீண்டும் அப்படியோர் நிலைக்கு இலங்கையை உயர்த்த திறமையான வீரர்கள் அடையாளம் காணப்பட்டு, உருவாக்கப்பட வேண்டியதே தற்போதைய தேவையாகும்.
10 வயதான செல்வசேகரன் ரிஷியுதன் பம்பலப்பிட்டி இந்து கல்லூரியில் 5 ஆம் தரத்தில் கல்வி பயில்கிறார்.
10 வயதாக இருந்தாலும் 13 வயதிற்குட்பட்ட பாடசாலை அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
பயிற்சியாளரின் அந்த தீர்மானத்தை சரியென உறுதிப்படுத்திய ரிஷியுதன், அசாத்திய திறமையை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
பாடசாலைகளுக்கிடையிலான இரண்டாம் தர கிரிக்கெட் தொடரில் பத்தரமுல்லை M.D.H. ஜயவர்தன பாடசாலை அணிக்கு எதிரான போட்டி ரிஷியுதன் தனது திறமையை பறைசாற்ற கிடைத்த அரியதோர் வாய்ப்பாகியுள்ளது.
போட்டியில் 9.4 ஓவர்களில் பந்துவீசிய அவர் ஓட்டங்கள் எதனையும் விட்டுக்கொடுக்காமல் 8 விக்கெட்களை வீழ்த்தி போட்டியின் நாயகனாகவும் தெரிவாகியுள்ளார்.
முல்லேரியா எதிரிவீர சரத்சந்த்ர மைதானத்தில் நேற்று முன்தினம் (23) நடைபெற்ற இந்த போட்டியில் M.D.H. ஜயவர்தன பாடசாலை அணி 28.4 ஓவர்களில் 28 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பம்பலப்பிட்டி இந்து கல்லூரி அணி 42.2 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 126 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது.
அதற்கமைய, ஓர் இன்னிங்ஸால் பம்பலப்பிட்டி இந்து கல்லூரி அணி முன்னிலை பெற்றது.