.webp)
Colombo (News 1st) நாட்டிற்கு 600,000 மெட்ரிக் தொன் சீனி தேவைப்படுவதாகவும் அத்தேவையின் 10% அல்லது 60,000 மெட்ரிக் தொன் சீனியே இலங்கையில் உற்பத்தி செய்யப்படுவதாகவும் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிப்பது தொடர்பான துறைசார் மேற்பார்வைக்குழு தெரிவித்துள்ளது.
மேற்பார்வைக்குழு பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த தரவுகளை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், சீனி உற்பத்தியை அடுத்தாண்டு அதிகரிப்பதற்கான செயற்றிட்டத்தை மூன்று மாதங்களுக்குள் தயாரித்து சமர்ப்பிக்குமாறு துறைசார் மேற்பார்வைக்குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
சீனி நுகர்வு தொடர்பான மக்களிடம் காணப்படும் தௌிவு மிகக்குறைவாக உள்ளதால், உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், முறையான வேலைத்திட்டத்தை தயாரிக்கவும் அதிகாரிகளுக்கு மேற்பார்வைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே, சீனித் தொழிற்சாலைகளின் துணைத் தயாரிப்பான எத்தனோலின் மிகை உற்பத்தியை தரநிலையுடன் ஏற்றுமதி செய்வதற்கான வேலைத்திட்டம் தேவையென அதிகாரிகளால் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
எத்தனோல் இறக்குமதியை தடை செய்ததன் மூலம் சீனித் தொழிற்சாலைகள் தற்பொழுது இலாபமடைந்து வருவதாகவும் குழுவில் வௌிக்கொணரப்பட்டுள்ளது.
சீனி உற்பத்தியின் துணை தயாரிப்பான இந்த எத்தனோல், மதுபான தயாரிப்பிற்காக பயன்படுத்தப்படுவதால், சீனித் தொழிற்சாலைகளுக்கு மதுபான தயாரிப்பிற்கான அனுமதிப்பத்திரம் வழங்குவது மிகவும் வினைத்திறனானது என அதிகாரிகள் குழுவில் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், 2024 ஆம் ஆண்டில் சீனி உற்பத்தியை அதிகரிப்பதற்கான செயற்திட்டத்தை வழங்குமாறு அதிகாரிகளுக்கு மேற்பார்வைக் குழுவினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.