பண்டிகைக் காலத்தில் சந்தையில் சீனிக்கு தட்டுப்பாடு

by Bella Dalima 09-11-2023 | 8:05 PM

Colombo (News 1st) தீபாவளியைக் கொண்டாட மக்கள் தயாராகி வருகின்ற நிலையில், சந்தையில் சீனிக்கு  தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டமை, நிர்ணய விலை அறிவிக்கப்பட்டமையினால் சந்தையில் சீனிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர். 

பண்டிகைக் காலத்தில் பலகாரங்களை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களில் சீனியும் முக்கிய இடம் வகிக்கின்றது.

எனினும், நாட்டின் அநேகமான பகுதிகளில் சீனிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அதிக விலைக்கு அதனை கொள்வனவு செய்ய வேண்டிய நிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

ஒரு கிலோகிராம் சீனிக்கு  25 சதமாக இருந்த இறக்குமதி வரியை 50 ரூபாவாக அதிகரிக்க நிதியமைச்சு கடந்த முதலாம் திகதி நடவடிக்கை எடுத்தது. 

இறக்குமதி செய்யப்படும் சீனியின் விலை அதிகரிப்பை தடுக்கும் வகையில், நிர்ணய விலை விதிக்கப்பட்டு வர்த்தமானி வௌியிடப்பட்டது.

அதற்கமைய, பொதி செய்யப்பட்ட வெள்ளை சீனி ஒரு கிலோகிராம் 295 ரூபாவாகவும், பொதி செய்யப்படாத வெள்ளை சீனி ஒரு கிலோகிராம் 275 ரூபாவாகவும் விற்பனை செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டது

பொதி செய்யப்பட்ட சிவப்பு சீனி ஒரு கிலோகிராமின் விலை 350 ரூபாவாகவும், பொதி செய்யப்படாத சிவப்பு சீனி ஒரு கிலோகிராமின் விலை 330 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டது.