.webp)
அல் ஜசீரா ஊடகத்தின் காஸா பிரிவு செய்தியாளர் Wael al-Dahdouh-வின் குடும்பத்தை சேர்ந்த நால்வர் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.
கத்தாரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் அல் ஜசீரா ஊடகத்தின் காஸா பிரிவு தலைவர் Wael al-Dahdouh-வின் மனைவி, மகன், மகள், பேரன் என நால்வர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அவ்வூடகம் செய்தி வௌியிட்டுள்ளது.
காஸா மீதான தாக்குதல் தொடங்கிய பின்னர் இடம்பெயர்ந்த Wael al-Dahdouh-வின் குடும்பத்தினர் Nuseirat அகதிகள் முகாமில் தங்கியிருந்த போது, இஸ்ரேலின் தாக்குதலுக்கு இலக்காகியதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Nuseirat அகதிகள் முகாமில் இருந்தவர்களில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்ற விபரம் தெரியவில்லை.
குடும்பத்தார் உயிரிழந்த செய்தி அறிந்து அல் அக்ஸா மருத்துவமனைக்கு சென்ற Dahdouh, தனது மகனின் சடலத்தை கைகளில் ஏந்திக் கதறும் புகைப்படம் வௌியாகியுள்ளது.
இதன்போது, 'எங்களை பழி வாங்க எங்கள் குழந்தைகளை கொன்று குவிக்கின்றனர்,' என கூறி அவர் அழுதுள்ளார்.
53 வயதான Dahdouh பல ஆண்டுகளாக பாலஸ்தீன போர் பற்றி செய்திகளை சேகரித்து வந்தவர். காஸாவாசிகளால் கொண்டாடப்படும் அவர், தற்போது போருக்கு குடும்பத்தை இழந்து நிற்கிறார்.
பாலஸ்தீனத்தில் குறிப்பாக காஸாவில் போர் பாதிப்புகளால் ஏற்பட்ட மக்களின் வேதனைகளை சாட்சிப்படுத்தியவரே போரின் சாட்சியாக நிற்கிறார்.
இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 6500 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த அக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் மிகத் தீவிரமான பதிலடியைக் கொடுத்து வருகிறது.