ஆய்வு நடவடிக்கைகளில் இருந்து ருஹுணு பல்கலை விலகல்

சீன கப்பலுடனான ஆய்வு நடவடிக்கைகளில் இருந்து ருஹுணு பல்கலைக்கழகம் விலகல்

by Staff Writer 03-10-2023 | 8:39 PM

Colombo (News 1st) இந்தியா அதீத கரிசனை செலுத்தியுள்ள  Shi Yan 6  கப்பலுடன் இணைந்து மேற்கொள்ளவிருந்த ஆய்வு நடவடிக்கைகளில் இருந்து ருஹுணு பல்கலைக்கழகம் விலகத் தீர்மானித்துள்ளது. 

Shi Yan 6 கப்பல் ஒக்டோபர் 25 ஆம் திகதி இலங்கைக்கு வரும் என கடற்படையினர் முன்னர் கூறியிருந்த  போதிலும் நேற்று வரை  குறித்த கப்பலுக்கு இராஜதந்திர ரீதியாக அனுமதி வழங்கப்படவில்லை.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து 474 கடல் மைல் தொலைவில் இந்திய பெருங்கடலில்  Shi Yan 6 கப்பல் இன்று பிற்பகல் சஞ்சரித்தது. 

Shi Yan 6 கப்பல்  இலங்கையிலுள்ள துறைமுகம் ஒன்றுக்குள் பிரவேசிப்பதற்கு இதுவரை இராஜதந்திர அனுமதி வழங்கவில்லை  என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த கப்பல் ஒரு ஆய்வுக் கப்பல் என்பதால், அவர்கள் ஆய்வுகளை மேற்கொள்ளும் திகதிகள், பகுதிகள்  தொடர்பில் தமக்கு தெரிவிக்க வேண்டும் என வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ருஹுணு பல்கலைக்கழகத்துடன் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம், இந்த கப்பல் வருவதாக நாரா நிறுவனம் முன்னர் அறிவித்திருந்தது.

எவ்வாறாயினும், பல்கலைக்கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்திய இரண்டு பேராசிரியர்களில் ஒருவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் மற்றைய பேராசிரியர் பல்கலைக்கழக அமைப்பை விட்டு வெளியேறியுள்ளதாகவும் ருஹுணு பல்கலைக்கழகம் இன்று அறிவித்துள்ளது.