.webp)
Colombo (News 1st) இலங்கைக்கு கடன் வழங்கிய பிரதான நாடுகளான இந்தியா, ஜப்பான், பிரான்ஸ் ஆகிய நாடுகள் இலங்கையின் கடனைக் குறைத்து, திருப்பிச் செலுத்தும் காலத்தை நீடிப்பது தொடர்பில் இம்மாத இறுதிக்குள் இணக்கப்பாட்டிற்கு வரவுள்ளதாக Reuters செய்தி வௌியிட்டுள்ளது.
இலங்கை தனது வெளிநாட்டுக் கடனை திருப்பிச் செலுத்துவது தொடர்பாக ஜப்பான், சீனா, இந்தியா உள்ளிட்ட இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியதாக ஜப்பானின் Sankei பத்திரிகையை மேற்கோள் காட்டி Reuters தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு கடன் வழங்கிய முன்னணி நாடுகளான அமெரிக்கா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகள் உலக நாடுகளின் வருடாந்த கூட்டத்தின் போது இந்த கடன் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ளத் தயாராகி வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவை உள்ளடக்கி அல்லது சீனா அல்லாமல் உடன்படிக்கையினை எட்டுவதற்கு எதிர்பார்ப்பதாக ஜப்பானிய நிதி அமைச்சின் சிரேஷ்ட செய்தியாளரை மேற்கோள் காட்டி Reuters செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை கடனை திருப்பி செலுத்தாமைக்கு எதிராக எடுக்கப்பட்ட நீதிமன்ற நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு அமெரிக்க அரசாங்கம் அந்நாட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
நியூயார்க் ஃபெடரல் நீதிமன்றத்தில் மனு ஒன்றை சமர்ப்பித்து, அமெரிக்க அரசாங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக Bloomberg இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் ஹெமில்டன் ரிசர்வ் வங்கி 250 மில்லியன் டொலர் முறிகள் பத்திரங்களையும் அதன் வட்டியையும் திரும்பப்பெற வழக்கைத் தாக்கல் செய்தது.
இந்த வழக்கை தற்காலிகமாக இடைநிறுத்துவது இலங்கை மற்றும் ஏனைய கடன் வழங்கிய நாடுகளுடனான கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளுக்கு உதவும் என அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.