.webp)
Colombo (News 1st) கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் முதற்கட்ட செயற்பாடுகள் அடுத்த வருடம் ஜூன் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு, துறைசார் மேற்பார்வைக் குழுவில் தெரிவித்துள்ளது.
வலுசக்தி மற்றும் போக்குவரத்து தொடர்பான துறைசார் மேற்பார்வைக்குழு, அதன் தலைவர் நாலக பண்டார கோட்டேகொட தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே அமைச்சின் அதிகாரிகள் இதனை தெரிவித்தனர்.
இலங்கை துறைமுக அதிகார சபை (திருத்த) சட்டமூலம், 2022 ஆம் ஆண்டுக்கான விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) லிமிட்டட் நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை, துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் 2022 ஆம் ஆண்டுக்கான செயலாற்றுகை அறிக்கை என்பவற்றை ஆராய்வதற்காக குறித்த அமைச்சு, விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) லிமிட்டட் நிறுவனம் ஆகியவற்றின் அதிகாரிகள் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தனர்.
இதில் இலங்கை துறைமுக அதிகார சபை (திருத்த) சட்டமூலத்திற்கு குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.
அத்துடன், இலங்கையில் பொருட்களை விநியோகிக்கும் போது கடல் மார்க்கமாக பொருட்களை கொண்டு செல்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறும் அமைச்சின் அதிகாரிகளுக்கு குழு ஆலோசனை வழங்கியுள்ளது.