வெற்றிடங்களை பூர்த்தி செய்யுமாறு உத்தரவு

அதிபர்களுக்கான வெற்றிடங்களை பூர்த்தி செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு

by Staff Writer 27-09-2023 | 12:28 PM

Colombo (News 1st) இலங்கை அதிபர் சேவையின் தரம் III-இற்கான 4,718 வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்காக கல்வி அமைச்சினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த ஆட்சேர்ப்பிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான இடைக்கால தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விடயத்துடன் தொடர்புடைய மேலும் சில மனுக்களை வாபஸ் பெறுவதற்கு மனுதாரர்களினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் ஆட்சேர்ப்பு தொடர்பான சுற்றுநிருபத்தை இடைநிறுத்துமாறு உயர் நீதிமன்றத்தினால் இதற்கு முன்னர் பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவும் இன்று(27) நீக்கப்பட்டது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.