Colombo (News 1st) 2023 உலகக்கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பெயரிடப்பட்டுள்ள இலங்கை குழாமிற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் அனுமதி வழங்கியுள்ள நிலையில், பெயர்ப்பட்டியல் உத்தியோகபூர்வமாக வௌியிடப்பட்டுள்ளது.
அணியின் தலைவராக தசுன் ஷானக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தெரிவுக்குழுவினால் வௌியிடப்பட்டுள்ள இலங்கை குழாமின் விபரங்களுக்கமைய, அணியின் உப தலைவராக குசல் மெண்டிஸ் பெயரிடப்பட்டுள்ளதுடன், குசல் ஜனித் பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ, பெத்தும் நிஸங்க, சரித் அசலங்க மற்றும் சதீர சமரவிக்ரம ஆகியோர் துடுப்பாட்ட வீரர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.
தசுன் ஷானக்க, தனஞ்சய டி சில்வா, துனித் வெல்லாலகே, சஹன் ஆரச்சிகே ஆகியோர் சகலதுறை வீரர்களாக அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.
மதீஷ பத்திரண, கசுன் ராஜித, ப்ரமோத் மதுஷான், பினுர பெர்னாண்டோ ஆகியோர் பந்துவீச்சாளர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் எதிர்வரும் ஒக்டோபர் 05 ஆம் திகதி ஆரம்பமாகும் 2023 உலகக்கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை குழாம் இன்று நாட்டிலிருந்து புறப்பட்டுச்செல்லவுள்ளது.
இம்முறை உலகக்கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான உத்தியோகபூர்வ உள்நாட்டு தொலைக்காட்சி மற்றும் வானொலி நேரலைக்கான உரிமையை கெப்பிட்டல் மகாராஜா ஊடக வலையமைப்பு தன்வசப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.