Colombo (News 1st) தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிடப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், வீதி மறியலில் ஈடுபட முனைந்த ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (26) காலை 6 மணியிலிருந்து முழுமையான கடையடைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், அந்த மாநில அரசின் ஆதரவின்மையால், அது பெரியளவில் வெற்றியளிக்கவில்லை என தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிடப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த விவசாயி ஒருவரை பொலிஸார் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக நேற்று நள்ளிரவு 12 மணியிலிருந்து இன்று நள்ளிரவு 12 மணி வரை பெங்களூரின் சில பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
காவிரி பிரச்சினையில் பாரதிய ஜனதா கட்சியும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் அரசியல் செய்வதாக மாநில முதல்வர் சித்தராமையா சாடியுள்ளார்.
மக்களின் நலனுக்காகவன்றி, அரசியல் இலாபத்திற்காகவே இந்த கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த கடையடைப்பு போராட்டத்திற்கு பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் H.D.குமாரசாமி ஆதரவு தெரிவித்துள்ளதுடன், தமிழகத்திற்கு காவிரி நீர் வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
நாளை மறுதினம் 28 ஆம் திகதியிலிருந்து ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை 3000 கன அடி நீரை தமிழகத்திற்கு திறந்துவிடுமாறு காவிரி நீர் ஒழுங்குமுறை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.