3 மணித்தியால அகழ்வுப் பணியில் எவ்வித தடயப் பொருட்களும் கிடைக்கவில்லை – முல்லைத்தீவு பொலிஸ்

3 மணித்தியால அகழ்வுப் பணியில் எவ்வித தடயப் பொருட்களும் கிடைக்கவில்லை – முல்லைத்தீவு பொலிஸ்

எழுத்தாளர் Staff Writer

25 Sep, 2023 | 9:06 pm

Colombo (News 1st) முல்லைத்தீவு – முள்ளிவாய்க்காலில் புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் வெடிபொருட்கள் உள்ளிட்ட பெறுமதி வாய்ந்த பொருட்களை தோண்டியெடுக்கும் நடவடிக்கை இன்று(25)  முன்னெடுக்கப்பட்டது.

எனினும், குறித்த அகழ்வுப் பணியில் எவ்வித பொருட்களும் கைப்பற்றப்படவில்லை என முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.

முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரை பகுதியில் குறித்த அகழ்வுப் பணி இன்று(25) முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு பொலிஸாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியில் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டது.

2009 ஆம் ஆண்டிற்கு முற்பட்ட காலப்பகுதியில் விடுதலைப் புலிகளால் பாரியளவிலான வெடி பொருட்கள், தங்கம் உள்ளிட்ட பெறுமதி மிக்க பொருட்கள் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாக கருதி முல்லைத்தீவு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனையடுத்து முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் முன்னிலையிலும் தொல்பொருள் திணைக்களம், கிராம சேவையாளர், பொலிஸார், சிறப்பு அதிரடிப்படையினர், பிரதேச செயலக அதிகாரிகளின் முன்னிலையில் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டது.

சுமார் 3 மணித்தியாலங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணியில் எவ்வித தடையப் பொருட்களும் கிடைக்காத நிலையில் நாளை(26) காலை 9 மணியிலிருந்து அகழ்வுப் பணி மீண்டும் முன்னெடுக்கப்படவுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்