வவுனியாவில் அடக்கம் செய்யப்பட்ட சிறுமியின் சடலம் காணாமற்போனமை தொடர்பில் பொலிஸார் விசாரணை

வவுனியாவில் அடக்கம் செய்யப்பட்ட சிறுமியின் சடலம் காணாமற்போனமை தொடர்பில் பொலிஸார் விசாரணை

எழுத்தாளர் Bella Dalima

21 Sep, 2023 | 5:05 pm

Colombo (News 1st) வவுனியா – இராசேந்திரங்குளம் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டிருந்த இரண்டு வயது சிறுமியின் சடலம் காணாமற்போனமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா – பாரதிபுரத்தில் கடந்த மாதம் 25 ஆம் திகதி  தனது  வீட்டு முற்றத்தில்  விளையாடிக்கொண்டிருந்த  இரண்டு வயது சிறுமியான  லிங்கராஜ் டிவிகா  நீர்த்தொட்டியில் தவறி வீழ்ந்து உயிரிழந்தார்.

குடும்பத்தின் இரண்டாவது பிள்ளையான இவரது பூதவுடல் இறுதிக் கிரியைகளை அடுத்து,  இராசேந்திரங்குளம் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில்,  கடந்த 5 ஆம் திகதி பாரதிபுரம் பகுதியை சேர்ந்த மற்றுமொருவரின் பூதவுடலை நல்லடக்கம் செய்வதற்காக சிலர் குறித்த மயானத்திற்கு சென்றிருந்தனர்.

இதன்போது,  நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திலிருந்து சிறுமியின் பூதவுடல் தோண்டி எடுத்துச்செல்லப்பட்டுள்ளதை   கண்காணித்த அவர்கள் சிறுமியின் குடும்பத்தாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சிறுமியின் சடலம் காணாமற்போனமை தொடர்பாக பெற்றோர் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு செய்துள்ளனர்.

கடந்த 3 ஆம் திகதிக்கு பின்னர் சடலம் தோண்டி எடுக்கப்பட்டிருக்கலாம் என நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முறைப்பாட்டிற்கு அமைய, மயானத்திற்கு சென்ற போது  நல்லடக்கம் செய்யப்பட்ட இடம்  தோண்டப்பட்ட நிலையில் காணப்பட்டதாகவும் அந்த இடம் தொடர்ந்தும் அவ்வாறே வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

சிறுமியின் பூதவுடலுக்கு என்ன நடந்தது என்பதை கண்டறியவதற்கான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்