நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து ஒக்டோபரில் ஆரம்பம் – தமிழ்நாடு அமைச்சர் E.V.வேலு

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து ஒக்டோபரில் ஆரம்பம் – தமிழ்நாடு அமைச்சர் E.V.வேலு

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து ஒக்டோபரில் ஆரம்பம் – தமிழ்நாடு அமைச்சர் E.V.வேலு

எழுத்தாளர் Staff Writer

21 Sep, 2023 | 8:20 am

Colombo (News 1st) நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான கப்பல் போக்குவரத்து எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு அமைச்சர் E.V.வேலு தெரிவித்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து இலங்கை, காங்கேசன்துறைக்கு இடையேயான கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்கும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழக அரசின் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் E.V.வேலு, நாகப்பட்டினத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிகளை நேற்று(20) நேரில் சென்று பார்வையிட்டார்.

நாகப்பட்டினம் சிறு துறைமுகத்திலிருந்து 60 கடல் மைல்கள் தொலைவில் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு 150 பயணிகள் பயணிக்கும் வகையிலான விரைவு பயணியர் கப்பல் போக்குவரத்தை இயக்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்த நடவடிக்கையை தமிழ்நாடு கடல்சார் வாரியம், ஒன்றிய அரசின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து துறை மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சு முன்னெடுத்து வருகின்றது.

ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள இந்திய கப்பல் போக்குவரத்து கழகம் (Shipping Corporation of India), விரைவு பயணியர் கப்பல் போக்குவரத்தை நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இயக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. 

மேலும், இந்த பயணியர் கப்பல் சேவை வெளிநாட்டு பயணம் என்பதால் ஒன்றிய அரசின் தொழில்துறை பாதுகாப்பு அதிகாரிகள் (CISF) மூலம் கையாள ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் துறைமுகத்தில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு ஒக்டோபர் முதல் வாரத்தில், தமிழ்நாடு அரசுடன் இணைந்து பயணிகள் கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க ஒன்றிய அரசு தீர்மானித்துள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பயணிகள் கப்பல் போக்குவரத்து, இலங்கை மக்கள் குறிப்பாக, தமிழ் மக்களின் கல்வி, மருத்துவம், உணவுப் பொருட்கள், வணிகம், ஆன்மீகம் மற்றும் சுற்றுலா ஆகிய தேவைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என அமைச்சர் E.V.வேலு தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில் உள்ள டெல்டா மாவட்டங்கள் குறிப்பாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட பகுதிகள், கலாசாரப் பகிர்வு, பொருளாதாரம் ஆகியவற்றில் மிகப்பெரிய வளர்ச்சியை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்