கனேடியர்களுக்கான விசாக்கள் இடைநிறுத்தம்

கனேடியர்களுக்கான விசாக்களை இந்தியா இடைநிறுத்தியுள்ளது

by Bella Dalima 21-09-2023 | 2:22 PM

Colombo (News 1st) கனேடிய பிரஜைகளுக்கான விசாக்களை இந்தியா இடைநிறுத்தியுள்ளது.

விசா வழங்கும் நடவடிக்கையை இந்தியா நிறுத்தியதால், கனடாவிலிருந்து இந்தியாவிற்கு எவரும் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஹர்தீப் சிங் நிஜார் கொலை விவகாரம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிணக்குகள் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

செயற்பாட்டுக் காரணங்களால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக விசா சேவைகளை வழங்கும் BLS-இன் இந்தியாவிற்கான பிரிவு தெரிவித்துள்ளது. 

சீக்கிய பிரிவினைவாத தலைவரின் கொலையுடன் இந்தியாவிற்கு தொடர்புள்ளதாக தெரிவிக்கப்படும் நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதாக கனடா அறிவித்துள்ளது. 

இதனையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையில் முறுகல் நிலை தீவிரமடைந்துள்ளது. 

இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை இந்தியா நிராகரித்துள்ளது. 

இந்தியாவிலிருந்து கனடா செல்லும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மத்திய அரசு நேற்று பயண எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், கனடாவிலிருந்து வருவோருக்கு விசா வழங்குவதை இந்திய தூதரகம் இன்று  நிறுத்தியிருக்கிறது.

காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹா்தீப் சிங் நிஜாா் (45) கனடாவில் கொல்லப்பட்டதற்கு இந்திய அரசின் தலையீடு உள்ளதாக கனேடிய பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ பாராளுமன்றத்தில் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதைத் தொடா்ந்து, அந்நாட்டில் உள்ள இந்திய தூதரக மூத்த அதிகாரியை நாட்டில் இருந்து வெளியேறுமாறு கனடா அரசு உத்தரவிட்டது.

இந்திய அரசு பதிலடியாக இந்தியாவில் உள்ள கனடா தூதரக உயா் அதிகாரியை வெளியேற உத்தரவிட்டது.

இந்த விவகாரம் இரு நாடுகளுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பெரும் சா்ச்சையை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது தீவிரமடைந்துள்ளது.