Colombo (News 1st) நியூயார்க் நகரில் உள்ள சிறுவர் பாடசாலை மற்றும் பராமரிப்பு நிலையம் ஒன்றில் இருந்து Fentanyl எனப்படுகின்ற 1 கிலோகிராம் வலி நிவாரணி வில்லைகள் மீட்கப்பட்டுள்ளன.
ஃபெண்டானில் (Fentanyl) எனப்படும் குறித்த வலி நிவாரணி புற்றுநோயாளிகள் மற்றும் வலிமிகுந்த அறுவை சிகிச்சை நடவடிக்கைகளில் இருந்து மீண்டு வருபவர்களுக்கு வழங்கப்படும் ஒரு வகை சக்திவாய்ந்த செயற்கை பைபெரிடைன் ஓபியாய்டு (synthetic piperidine opioid ) மருந்து ஆகும்,
குறித்த வில்லைகளை உட்கொண்டமையால், சிறுவர் பாடசாலையில் இரண்டு வயதான சிறுவன் உயிரிழந்துள்ளதோடு, மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த Nicholas Dominici என்ற சிறுவன் அளவுக்கதிகமான ஃபெண்டானில் வில்லைகளை உட்கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தில் இருவர் மீது போதைப்பொருள் சதி மற்றும் கொலைக்குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குறித்த சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் 8 மாதம் தொடக்கம் 2 வயதிற்கிடைப்பட்ட சிறார்கள் மருந்து வில்லைகளை உட்கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சிறுவர்கள் பயன்படுத்தும் படுக்கை விரிப்புகளுக்கு கீழ் இருந்து ஃபெண்டானில் வில்லைகள் மீட்கப்பட்டுள்ளன.
மூன்று குழந்தைகளுக்கு நர்கன் (Narcan) கொடுக்கப்பட்டுள்ளது. இது ஓபியாய்டு (opioid) அதிகம் எடுத்துக்கொண்டதை சரிப்படுத்த பயன்படுத்தப்படும் ஒரு அவசரகால மருந்து வகையாகும்.
குறித்த சிறுவர் பராமரிப்பு நிலையத்தின் உரிமையாளரும் குடியிருப்பாளருமே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் மீது ஒரு சிறுவனை கொலை செய்த குற்றச்சாட்டும் மூவருக்கு ஃபெண்டானில் கொடுத்து கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது. சிறுவர் பராமரிப்பு நிலையம் என்ற பேரில் போதைப்பொருட்களை பாவித்த குற்றச்சாட்டும் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.
சிறுவர் பராமரிப்பு நிலையத்திலிருந்து மீட்கப்பட்ட ஒரு கிலோ ஃபெண்டானில் மருந்து வில்லைகள் சுமார் 500,000 பேரை கொல்லக்கூடியதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹெரோயினை விட 50 மடங்கு சக்திவாய்ந்த செயற்கை வலி நிவாரணியான Fentanyl, அமெரிக்காவில் போதைப்பொருள் மூலம் ஏற்படும் இறப்புகளின் அதிகரிப்பிற்கு காரணம் என்று கூறப்படுகிறது.