.webp)
Colombo (News 1st) 2023 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் வெற்றிக்கிண்ணம் MTV, MBC தலைமையகத்திற்கு கொண்டுவரப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது.
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை இலங்கையில் ஒலி, ஒளிபரப்பு செய்யும் உரிமையைப் பெற்ற ஊடக வலையமைப்பு என்ற அடிப்படையிலேயே இந்த கிண்ணம் MTV, MBC தலைமையகத்திற்கு கொண்டுவரப்பட்டது.
உலகக்கிண்ணத்தை வரவேற்கும் இந்த நிகழ்வில், நாட்டின் நாலாபுறத்தில் இருந்தும் வருகை தந்த பாடசாலை மாணவர்கள், கிரிக்கெட் வீரர்கள், கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் உயரதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
இலங்கையின் பாரம்பரிய நடன நிகழ்வுகளால் உலகக்கிண்ணம் வரவேற்கப்பட்டது.
2023 கிரிக்கெட் உலகக்கிண்ணம் கடந்த ஜூன் மாதம் இந்தியாவின் அஹமதாபாத் நரேந்திர மோடி விளையாட்டரங்கில் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவற்றுக்கு கிண்ணம் எடுத்துச்செல்லப்பட்டது.
நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, பப்புவா நியூ கினியா, அமெரிக்கா, மேற்கிந்தியத்தீவுகள், பங்களாதேஷ், மத்திய கிழக்கு நாடுகள், மலேசியா, தென்னாபிரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளுக்கு இந்த கிண்ணம் இதுவரை எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட இந்த கிண்ணத்திற்கு நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தி கிரிக்கெட் விளையாடும் மாணவர்கள் பாரிய வரவேற்பளித்திருந்தனர்.
அத்துடன், பொதுமக்களும் பாரியளவில் திரண்டு கிண்ணத்தை வரவேற்றனர்.
10 அணிகள் கலந்துகொள்ளும் 2023 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் ஒக்டோபர் 5 தொடக்கம் நவம்பர் 19 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்தியாவின் 10 மைதானங்களில் இந்த போட்டிகள் நடைபெறவுள்ளன.
உலகக்கிண்ண தொடரொன்றை இந்தியா தனித்து நடத்தும் முதற்சந்தர்ப்பம் இதுவாகும்.
இந்தத் தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெறவுள்ளன.