.webp)
Chennai: சென்னையில் பிஸ்கட் பக்கெட்டில் ஒரு பிஸ்கட் குறைவாக இருந்ததால், வழக்குத் தொடர்ந்த வாடிக்கையாளருக்கு ஒரு இலட்சம் இந்திய ரூபா இழப்பீடு வழங்கக் கோரி நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னையை சேர்ந்த தில்லிபாபு என்பவர் கடந்த 2021 ஆம் ஆண்டு கடை ஒன்றில் Sunfeast Marie Lite பிஸ்கட் பக்கெட்களை வாங்கியுள்ளார்.
பக்கெட்டில் 16 பிஸ்கட்களுக்கு பதிலாக 15 பிஸ்கட்கள் மட்டுமே இருந்துள்ளன. இது குறித்து கடைக்காரரிடமும், குறித்த பிஸ்கட் நிறுவனத்திடமும் முறையிட்ட தில்லிபாபுவுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து, நுகர்வோர் நீதிமன்றத்தில் தில்லிபாபு தாக்கல் செய்த மனுவில், ஒரு பிஸ்கட்டின் விலை 75 சதம் என்றும், நாளொன்றுக்கு 50 இலட்சம் பிஸ்கட் பக்கெட்களை தயாரிக்கும் நிறுவனம் ரூ. 29 இலட்சம் ஊழல் செய்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது, பிஸ்கட் பக்கெட்கள் எடையை வைத்துதான் கணக்கிடப்படுவதாகவும், எண்ணிக்கையை வைத்து அல்ல என்றும் பிஸ்கெட் நிறுவனம் விளக்கம் அளித்தது.
இதை ஏற்க மறுத்த நுகர்வோர் நீதிமன்றம்,
ஒரு உணவுப் பொருள் பாக்கெட் செய்யப்பட்ட பின்பு ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச்செல்லும்போது அல்லது காற்று, மழை போன்ற இயற்கை காரணங்களால் 4.6 கிராம் எடை குறையலாம் என்று வணிக சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த சலுகை பிஸ்கட்களுக்கு கிடையாது. பிஸ்கட் பக்கெட் இதுபோன்ற காரணங்களால் எடை குறைய வாய்ப்பில்லை. மேலும் பிஸ்கட்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் விற்பனை செய்யவில்லை. எடையின் அடிப்படையில் தான் விற்பனை செய்யப்படுகிறது என்று கூறும் காரணத்தையும் ஏற்க முடியாது. ஏனென்றால் பிஸ்கட் பக்கெட் கவரில் 16 பிஸ்கட்கள் உள்ளே உள்ளன என்று தான் கூறப்பட்டுள்ளது. தவிர எடையை பற்றி கூறவில்லை. எனவே, நேர்மையற்ற முறையில் வியாபாரம் செய்ததற்காகவும், சேவை குறைபாட்டிற்காகவும் வழக்கு தொடர்ந்த தில்லி பாபுவுக்கு பிஸ்கட் நிறுவனம் ஒரு இலட்சம் இந்திய ரூபா இழப்பீடு வழங்க வேண்டும்
என தீர்ப்பளித்துள்ளது.