.webp)
Colombo (News 1st) நிலவை பார்த்து இரசிப்பதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இன்று ஒரு முக்கியமான நாள். இன்று (30) தெரியும் சுப்பர் ப்ளூ மூனை (Super Blue Moon) அவர்கள் கண்டு களிக்கலாம்.
Super Blue Moon என்பது சுப்பர் மூன் (Super Moon) மற்றும் ப்ளூ மூன் (Blue Moon) ஆகிய இரண்டு நிகழ்வுகளும் ஒன்றாக நிகழ்வதைக் குறிக்கிறது.
நிலவு தனது நீள்வட்டப் பாதையில் பூமிக்கு மிக அருகில் வரும்போது சற்றே பெரிதாகத் தெரியும். இதனை Super Moon என்கின்றனர்.
Blue Moon என்பது ஒரே மாதத்தில் வரும் இரண்டாவது முழு நிலவு.
நிலவு தனது நீள்வட்டப் பாதையில் பூமிக்கு மிக அருகில் வரும்போது, அதுவே மாதத்தின் இரண்டாவது முழு நிலவாக அமைந்து விட்டால், அது Super Blue Moon என்று அழைக்கப்படுகிறது.
இது மிக அரிதான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. கடந்த Super Blue Moon 2009 ஆம் ஆண்டு நிகழ்ந்தது. அடுத்த முறை இது 2037ஆம் ஆண்டு தான் நிகழும்.
ஓராண்டுக்கு மொத்தம் 12 முழு நிலவுகள். 168 முழு நிலவுகள் நடந்தால் தான் ஒரு ‘Super Blue Moon’ நிகழும் என்பதால் இதனை அரிதான நிகழ்வு என்கின்றனர்.
எனினும், Blue Moon-க்கும் நீல நிறத்திற்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை.
இது ஆங்கில நாட்காட்டியின் வரவால் வந்த நிகழ்வு மாத்திரமே.
ஐரோப்பிய நாட்காட்டி அமைப்பில் ஜூலியஸ் சீசர் மற்றும் அகஸ்டஸ் சீசர் ஆகிய ரோமானிய மன்னர்களின் பெயர்களில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் அடுத்தடுத்து 31 நாட்களுடன் இணைக்கப்பட்டதால், மாதங்களின் நாட்கணக்குகள் கூடக் குறைய மாறின.
பெப்ரவரி மாதத்திற்கு 29 நாட்கள். ஆனால், நிலவு பூமியைச் சுற்றிவர 29.5 நாட்கள் ஆகிறது. இதனால், ஆங்கில நாட்காட்டியின் படி, ஒரே மாதத்தில் இரண்டு முழு நிலவுகள் வருவது அரிதானது. அதைக் குறிக்கவே இதை ‘Blue Moon’ என்று அழைத்தனர்.
வட இந்திய பஞ்சாங்கத்தின்படி ஒரு மாதத்திற்கு 29 அல்லது 30 நாட்கள் இருப்பதால், Blue Moon என்னும் நிகழ்வு சாத்தியப்படாது. ஆனால் தமிழ் மாதங்கள் சூரியனை அடிப்படையாகக் கொண்டவை.
சில நேரங்களில் தமிழ் மாதங்களுக்கு 32 நாட்கள் கூட இருக்கும். அதனால், தமிழ் மாத அமைப்பின் படி, ‘Blue Moon’ சாத்தியப்படும். ஆனால் தமிழ் கலாசாரத்தில் அதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை.
எனினும், இன்றைய தினத்தில் எவ்வித வானிலை மாற்றமும் நிகழாது!
Source:BBC