பெண்ணின் மூளையில் உயிருடன் இருந்த புழு

அவுஸ்திரேலிய பெண்ணின் மூளையில் உயிருடன் இருந்த புழு; வெற்றிகரமாக நீக்கிய மருத்துவர்கள்

by Bella Dalima 29-08-2023 | 3:01 PM

64 வயதான அவுஸ்திரேலிய பெண்ணின் மூளைக்குள் ஒட்டுண்ணிப் புழு ஒன்று உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலகில் இவ்வாறான நிகழ்வு இடம்பெறுவது இதுவே முதல் முறை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

குறித்த பெண் பல காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். 

நிமோனியா, வயிற்று வலி, வயிற்றுப் போக்கு, வறட்டு இருமல், காய்ச்சல், இரவு வியர்வை, மனச்சோர்வு, நினைவாற்றல் குறைபாடு ஆகியவற்றுக்கு அவர் நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். 

எனினும், மருந்துகளால் அவருக்கு எவ்வித நிவாரணமும் கிடைக்கவில்லை. இதனால்,  2021 ஜனவரி மாத கடைசியில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நீண்ட மருத்துவ பராமரிப்பு வழங்கப்பட்டது. ஆனால், நிலைமை சீராகவில்லை. 
2022-இல் அவரின் உடல் நலம் தீவிரமாக மோசமடையத் தொடங்கியது. இதனையடுத்து, அவருக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள் அவரின் மூளையை ஸ்கேன் செய்து பார்க்க விரும்பி அதற்கு பரிந்துரைத்தனர். ஸ்கேன் பரிசோதனையின் முடிவில் அந்த பெண்ணின் மூளையில் ஏதோ ஒரு புதிய பொருள் தென்பட்டது. அதனை அகற்ற ஒரு அறுவை சிகிச்சை தேவைப்பட்டது.

பின்னர் சிறிது காலம் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த அப்பெண்ணுக்கு, நரம்பியல் நிபுணர் அடங்கிய குழு அறுவை சிகிச்சை செய்தது. 

இதன்போது, அப்பெண்ணின் மூளையில் காணப்பட்ட 'பொருள்' ஒரு உயிருள்ள புழு என தெரிய வந்தது. 

அந்த புழு சிகப்பு நிறத்தில், சுமார் 3.15 அங்குலம் (8 சென்டி மீட்டர்) நீளம் இருந்தது. அதிர்ச்சியடைந்த மருத்துவ நிபுணர்கள் அறுவை சிகிச்சை மூலம் அதனை வெற்றிகரமாக வௌியில் எடுத்துள்ளனர். 

பின்னரான மருத்துவ பராமரிப்பு மற்றும் ஆலோசனைகள் மூலம் அப்பெண் குணமடைந்துள்ளார். 

Ophidascaris Robertsi என அழைக்கப்படும் பாம்பு வகையை சேர்ந்த இவ்வகை புழுக்கள் அவுஸ்திரேலியா, இந்தோனேசியா மற்றும் பப்புவா நியூ கினியா ஆகிய நாடுகளில் காணப்படுகின்றன. 

இந்த பெண்ணின் வாழ்க்கை முறைக்கோ, தொழிலுக்கோ பாம்புகளோடு எந்த தொடர்பும் இல்லையென்றாலும், அவர் வசித்து வந்த பகுதியில் உள்ள ஏரியில் பாம்புகள் அதிகம் காணப்படுகின்றன. அங்கிருந்து பெறப்பட்ட கீரைகளில் அந்த புழுவின் முட்டைகள் இருந்து அவர் அதனை உண்ணும்போது உள்ளே சென்று, புழுவாக உயிர் பெற்று, இரத்தத்தில் கலந்து, மூளைக்கு சென்று, அங்கேயே உண்டு அதன் மூலம் உயிர் வாழ்ந்து வந்திருக்கலாம் என யூகிக்கிறார்கள்.

"உயிருள்ள புழு ஒருவரின் மூளையில் வாழ்வது இது தான் உலகிலேயே முதல் முறை. ஆனால், இதுபோன்ற நிலைகள் எதிர்காலத்திலும் வரக்கூடும்" என மருத்துவக் குழுவிற்கு ஆலோசகராக செயற்பட்ட,  கேன்பரோவில் உள்ள தொற்றுநோய் சிறப்பு சிகிச்சை மருத்துவர் சஞ்சய சேனநாயக்க தெரிவித்துள்ளார்.