பிரக்ஞானந்தாவிற்கு பிரதமர் உள்ளிட்ட பலர் வாழ்த்து

இந்திய கிராண்ட்மாஸ்டர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தாவிற்கு பிரதமர், குடியரசுத் தலைவர் உள்ளிட்ட பலர் வாழ்த்து

by Staff Writer 25-08-2023 | 5:17 PM

உலகக்கிண்ண சதுரங்க தொடரில் இரண்டாம் இடத்தைப் பிடித்த இந்திய கிராண்ட்மாஸ்டர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தாவிற்கு  பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரக்ஞானந்தாவினால் தேசத்திற்கு பெருமை கிடைத்துள்ளதாகவும் இதுவொரு சிறிய சாதனை அல்லவெனவும் எதிர்வரும் போட்டிகளில் வெற்றியை பதிவு செய்வதற்கு தமது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவிப்பதாகவும் பாரத பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

18 வயதான கிராண்ட்மாஸ்டர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா, உலகக் கிண்ண சதுரங்க போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்து ஒவ்வொரு இந்தியரின் மனதையும் வென்றுள்ளதாக இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

அத்துடன், பிரக்ஞானந்தாவின் வெற்றிப் பயணத்தில் அவரது தாயார் நாகலக்ஷ்மியின் பங்களிப்பையும் குடியரசுத் தலைவர் பாராட்டியுள்ளார்.

இதனிடையே,  இறுதி முடிவு எவ்வாறு அமைந்தாலும் பிரக்ஞானந்தாவின் சாதனை 140 கோடி பேரின் கனவுகளுடன் எதிரொலிப்பதாகவும் முழு தேசமும் பெருமை கொள்வதாகவும் தமிழக முதல்வர் மு.கா.ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, 140 கோடி இந்தியர்களின் இதயங்களை பிரக்ஞானந்தா வென்றுள்ளதாக இந்தியாவின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கனவுகளை அடைந்து இந்தியாவிற்கு பெருமை சேர்க்குமாறு முன்னாள் இந்திய கிரிக்கட் வீரர் சச்சின் டெண்டுல்கரும் பிரக்ஞானந்தாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த 2023 உலகக்கிண்ண சதுரங்க தொடரின் இறுதிப்போட்டி அஸர்பைஜானில் உள்ள பாகு நகரில் நேற்றுடன் நிறைவுக்கு வந்தது.

கடுமையான போராட்டத்திற்கு பின்னர் இந்தியாவின் 18 வயதான இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவை வீழ்த்திய நோர்வேயின் மெக்னஸ் கார்ல்சன் ஆறாவது தடவையாக உலக சம்பியனானார்.

எவ்வாறாயினும், உலகக்கிண்ண சதுரங்க தொடரில் இறுதிப்போட்டிக்கு இந்தியா சார்பில் தெரிவான இரண்டாவது போட்டியாளர் என்ற சிறப்பையும், இளம் போட்டியாளர் என்ற சிறப்பையும் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா பெற்றமை விசேட அம்சமாகும்.

முதலாம் மற்றும் இரண்டாம் நிலை வீரர்களை வீழ்த்தி ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா உலகக்கிண்ண சதுரங்க தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார்.

சென்னையை சேர்ந்த 18 வயதான ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா, சதுரங்க ஜாம்பவான் விஷ்வநாதன் ஆனந்துக்கு பின்னர் உலகக்கிண்ண சதுரங்க தொடரில் இறுதி வரை முன்னேறிய முதல் இந்தியராக பதிவாகியுள்ளார்.

தொடரில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ள பிரக்ஞானந்தா Candidate Chess தொடருக்கு தகுதி பெற்றுள்ளார்.