.webp)
Colombo (News 1st) 2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளுக்கிடையிலான ரக்பி லீக் போட்டியில் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி 13 வருடங்களின் பின்னர் சாம்பியனானது.
இந்த போட்டியில் புனித பீட்டர்ஸ் கல்லூரி கடந்த ஆண்டு சாம்பியான கொழும்பு இசிபத்தன கல்லூரியை 28-17 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்தது.
2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளுக்கிடையிலான ரக்பி லீக் போட்டியின் சாம்பியனைத் தீர்மானிக்கும் போட்டி இன்று பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரிக்கும் கொழும்பு இசிபத்தன கல்லூரிக்கும் இடையே இந்த போட்டி நடைபெற்றது.
போட்டியில் முதல் பாதியில் 15-10 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் புனித பீட்டர்ஸ் கல்லூரி முன்னிலை வகித்தது.
இரண்டாம் பாதியில் புனித பீட்டர்ஸ் கல்லூரி மேலும் 13 புள்ளிகளை பெற்றதோடு, இசிபத்தன வீரர்களால் 7 புள்ளிகளை மாத்திரமே பெற முடிந்தது.
போட்டியின் சாம்பியனான புனித பீட்டர்ஸ் கல்லூரி 4 ட்ரைகள், ஒரு கன்வெர்ஷன், 2 பெனால்டிகள் உள்ளடங்கலாக 28 புள்ளிகளை தனதாக்கியது.
இசிபத்தன வீரர்கள் 2 ட்ரை, ஒரு பெனால்டி மற்றும் 2 கன்வெர்ஷன் மூலம் புள்ளிகளைப் பெற்றுக்கொண்டனர்.
இதற்கமைய, பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி இவ்வருடம் பாடசாலைகளுக்கிடையிலான ரக்பி லீக் சாம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.