Biofuel பயன்பாட்டை ஊக்குவிக்கும் சிங்கப்பூர்

விமானங்களில் உயிரி எரிபொருள் பயன்பாட்டை ஊக்குவிக்க சலுகைகளை வழங்கும் சிங்கப்பூர்

by Bella Dalima 26-07-2023 | 4:07 PM

Colombo (News 1st) உலகின் தற்போதைய சூழ்நிலையில், பசுமை இல்ல வாயு உமிழ்வை ஏறக்குறைய பூஜ்ஜிய நிலைக்கு குறைப்பதற்கான அவசரத் தேவை உருவாகியுள்ளது. 

கார்பன் உமிழ்வால் ஏற்படும் கடுமையான பாதிப்புகளை உணர்ந்து, உலக நாடுகள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றல் வளங்களுக்கு முன்னுரிமையளித்து, அவற்றின் உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.

இந்த நிலையில், கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்தும் வகையில், சிங்கப்பூர் விமானப் போக்குவரத்து ஆணையம் விமானங்களில் உயிரி எரிபொருளின் (Biofuel) பயன்பாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

உயிரி எரிபொருளை அதிகளவில் பயன்படுத்தும் விமான சேவை நிறுவனங்களுக்கு சிங்கப்பூர் விமான போக்குவரத்து ஆணையம் ஊக்குவிப்பு சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

அரசு, விமான நிறுவனங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்டவை 2050-க்குள் கார்பன் உமிழ்வை பூஜ்ஜிய நிலைக்கு குறைப்பதற்கு உறுதியேற்றுள்ளன. அது சாத்தியப்பட வேண்டும் எனில், நிலையான உயிரி பொருள் விநியோகம் சுமார் 1,600 மடங்கு அதிகரிக்கப்பட வேண்டும் என்பதை மதிப்பீடுகள் சுட்டிக்காட்டுகின்றன.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இவ்விடயத்தில் முன்னேற்றம் வலுவான நிலையில் இருந்தாலும், தென்கிழக்கு ஆசியா அடுத்த தசாப்தங்களில் விமானப் பயணத்திற்கான முக்கிய மையமாகத் திகழும். இந்த பிராந்தியத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்று செயல்படுவதற்கு சிங்கப்பூர் சிறந்த நிலையில் உள்ளது.

ஒட்டுமொத்த அளவில் உலகம் பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இந்த வேளையில், சிங்கப்பூரின் இந்த நடவடிக்கை அந்த இலக்கை விரைவாக எட்டுவதற்கு மிகவும் உதவும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

Source: The Hindu