அமேசான் காட்டில் காணாமற்போன4 சிறுவர்கள் மீட்பு

விமான விபத்தில் சிக்கி அமேசான் காட்டில் காணாமற்போயிருந்த 4 சிறுவர்கள் 40 நாட்களின் பின்னர் மீட்பு

by Bella Dalima 10-06-2023 | 5:52 PM

Colombia: விமான விபத்தில் சிக்கி, கொலம்பியாவின் அமேசான் காடுகளில் காணாமற்போயிருந்த நான்கு சிறுவர்கள் 40 நாட்களின் பின்னர் மீட்கப்பட்டுள்ளனர்.
 
நான்கு பேரும் உயிருடன் மீட்கப்பட்டதை கொலம்பிய நாட்டு அதிபர்  Gustavo Francisco Petro Urrego  உறுதி செய்துள்ளார். 

அமேசான் மழைக்காடுகளின் அடர்த்தியான பகுதிகளில் சிக்கிய நான்கு சிறுவர்களும் அங்கு இரைதேடி உண்டு பிழைத்துள்ளனர். 
 
அவர்களை மீட்கும் பணியில் பூர்வகுடிகள் இராணுவத்திற்கு உதவியுள்ளனர். 

லெஸ்லி ஜேகோபோம்பேர் (13), சோலோனி ஜேகோபோம்பேர் முகுடி (9),  டியன் ரனோக் முகுடி (4) மற்றும் கைக்குழந்தை கிறிஸ்டின் ரனோக் முகுடி ஆகிய நால்வரே மீட்கப்பட்டவர்கள்.

கடந்த மே முதலாம் திகதி  சிறிய ரக விமானம் ஒன்று ஆறு பயணிகள், ஒரு பைலட்டுடன் கொலம்பியாவிலிருந்து அமேசான் காட்டின் மேல் பறந்து கொண்டிருந்த போது விபத்திற்குள்ளானது. 

இதில் சிறுவர்களின் தாய் மேக்டலீனா முகுடி வேலன்சியா, பைலட் மற்றும் ஒரு பூர்வகுடி இனத் தலைவர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

விமானத்தின் பாகங்கள் கிடந்த பகுதியில் 3 சடலங்கள் கைப்பற்றப்பட்டன. ஆனால், விமானத்தில் பயணித்திருந்த மற்ற 4 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை. 

அதனையடுத்து, அப்பகுதியில் தேடுதல் நடத்தப்பட்டது. விபத்து நடந்த பகுதியிலிருந்து வெகு தூரத்தில் குழந்தைகளின் ஆடைகள், பால் போத்தல் போன்றவை கண்டெடுக்கப்பட்டன. இதனால் அவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பிருக்கலாம் என்று கருதி இராணுவம் தேடுதலை தீவிரப்படுத்தியது. 

அமேசான் காடுகள் மிகவும் அடர்ந்தவை என்பதால், பூர்வகுடிகளின் துணை இல்லாமல் அங்கே தேடுதல் சாத்தியப்படாது. அதனால், இராணுவம் பூர்வகுடிகளின் உதவியை நாடியது. அவர்களும் உதவிக்கரம் நீட்ட 40 நாட்களுக்கு பின்னர் 4 குழந்தைகளும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். 

இந்தப் பணியில் ஏராளமான தன்னார்வலர்களும் தங்களை இணைத்துக்கொண்டனர். கொலம்பிய நாட்டு ஊடகங்கள் இது தொடர்பான அன்றாடத் தகவல்களை பகிர்ந்து வர ஒட்டுமொத்த தேசமும் குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் எனும் ஆவலை வௌியிட்டது. 

இந்நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) மீட்கப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களை கொலம்பிய அரசு பகிர்ந்துள்ளது. 

மீட்கப்பட்ட நால்வரும் நாட்டின் தலைநகரான பொகோதாவிற்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து அவர்கள் அம்பியூலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 

குழந்தைகளும் அவர்களின் தாயும் பயணித்த செஸ்னா 206 (Cessna 206) வகை விமானம் அமேசோனாஸ் பகுதியின் அரரகுவாராவிலிருந்து சான் ஹோசே தெல் குவாவியாரேவிற்குப் பயணித்துக்கொண்டிருந்தது.

காட்டின்மீது பறந்துகொண்டிருக்கையில், எஞ்சின் கோளாறு ஏற்படவே விமானம் விபத்தில் சிக்கியது.