யாழ். மாவட்டத்தில் வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புகளை நடத்த தடை

by Bella Dalima 10-06-2023 | 4:05 PM

Colombo (News 1st) ஜூலை மாதம் முதலாம் திகதி முதல், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் வேளையிலும்,  ஞாயிற்றுக்கிழமைகளிலும் தரம் 9-க்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு தனியார் வகுப்புகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

யாழ். மாவட்ட சுகாதார தரப்பினர், பொலிஸார், தனியார் கல்வி  நிறுவனங்களின் உரிமையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள் தொடர்பில் பெற்றோருக்கு விழிப்புணர்வு கருத்தமர்வுகளை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

தனியார் கல்வி நிலையங்கள் 15 தொடக்கம் 30 நிமிடங்கள் வரை ஆன்மிகம், சமூகம் சார்ந்த விடயங்களை மாணவர்களுக்கு போதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

குறித்த செயற்பாடுகள் ஒழுங்காக நடைபெறுதை அவதானிக்க பிரதேச மட்டத்திலும், மாவட்ட மட்டத்திலும் குழு உருவாக்கப்படவுள்ளது.

இதேவேளை, தனியார் கல்வி நிலையங்கள்  உள்ளூராட்சி நிறுவனம் மற்றும் பிரதேச செயலகத்தில் பதிவு செய்வது கட்டாயம் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் குறிப்பிட்டார். 

தனியார் கல்வி நிலையங்களுடன் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின் போது,  பாடசாலை கல்விக்கு மேலதிகமாக வாரத்தில் ஏழு நாட்களும் ஓய்வின்றி கல்விச்  செயற்பாட்டில் ஈடுபடுவதனால் மாணவர்களுக்கும் சமுதாயத்திற்கும் ஏற்படும் சாதக - பாதக விளைவுகள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.