சலுகைக் கடனுதவியை பெற இலங்கைக்கு தகுதியுள்ளது

சலுகைக் கடனுதவியை பெற இலங்கைக்கு தகுதியுள்ளது: ஆசிய அபிவிருத்தி வங்கி அங்கீகாரம்

by Bella Dalima 09-06-2023 | 3:45 PM

Colombo (News 1st) அவசர அபிவிருத்தி நிதித் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக குறைந்த வட்டி வீதத்தில் வழங்கப்படும் சலுகை கடனுதவியைப் பெறுவதற்கு இலங்கைக்கு தகுதியுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) அங்கீகரித்துள்ளது.

குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்படும் சலுகை உதவிகளை பெற்றுக்கொள்வதன் மூலம், பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுத்தல், வறிய மற்றும் பாதிப்பை எதிர்நோக்கக்கூடிய  மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்குதல் உள்ளிட்ட அவசர அபிவிருத்தி நிதித் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான இலங்கையின் வாய்ப்புகள் விரிவுபடுத்தப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

அபிவிருத்தி அடைந்து வரும் உறுப்பு நாடுகளில், தனிநபர் மொத்த தேசிய வருமானம் மற்றும் கடன் தகுதியின் அடிப்படையில், சலுகைக் கடனுதவியைப் பெறுவதற்கு இலங்கைக்கு தகுதியுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி அங்கீகரித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், உரிய தகைமைகளை அங்கீகரிக்கும் பரிசீலனையை மேற்கொண்டதாக ஆசிய அபிவிருத்தி வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கை மக்களின் வாழ்வாதாரம் மற்றும் நல்வாழ்வை மீளக்கட்டியெழுப்புவதற்கு தொடர்ந்தும் ஒன்றிணைந்து செயற்படவுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசிய பணிப்பாளர் நாயகம் கெனிச்சி யோகோயாமா தெரிவித்தார்.